வள்ளியூர் அருகே கோவிலில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம் வார்டு வரைமுறைக்கு எதிர்ப்பு


வள்ளியூர் அருகே கோவிலில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம் வார்டு வரைமுறைக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 18 March 2020 10:15 PM GMT (Updated: 18 March 2020 3:41 PM GMT)

சிதம்பராபுரம் தில்லை காளியம்மன் கோவிலில் பொதுமக்கள் நேற்று குடியேறும் போராட்டம் நடத்தினர்.

வள்ளியூர், 

வார்டு வரைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வள்ளியூர் அருகே சிதம்பராபுரம் தில்லை காளியம்மன் கோவிலில் பொதுமக்கள் நேற்று குடியேறும் போராட்டம் நடத்தினர்.

வார்டு வரைமுறைக்கு எதிர்ப்பு 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்து சிதம்பராபுரம் யாக்கோபுரம் ஆகும். 9 வார்டுகள் கொண்ட இந்த பஞ்சாயத்தில் 1 மற்றும் 2–வது வார்டுகளில் உள்ள 205 பேரை பழவூர் மற்றும் ஆவரைகுளம் பஞ்சாயத்தில் சேர்ப்பதற்காக வார்டு வரைமுறை திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

கோவிலில் குடியேறும் போராட்டம் 

இந்நிலையில் வார்டு வரைமுறையை அமல்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் அதற்குரிய பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. வார்டு வரைமுறை திட்டத்தின் கீழ் பிரிப்பதால் தங்களுக்கு ரே‌ஷன், வாக்குசாவடி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் பறிபோகும் சூழ்நிலை உருவாகும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பராபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள தில்லை காளியம்மன் கோவிலில் அம்மனிடம் மனு கொடுத்து முறையிட்டனர். பின்னர் கோவிலில் குடியேறும் போராட்டம் நடத்தினர். இதில் சுமார் 75 பெண்கள் உட்பட 140 பேர் கலந்து கொண்டனர்.

மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் தங்களுடைய ரே‌ஷன் கார்டு, ஆதார் அட்டைகளை திரும்ப ஒப்படைக்க போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story