மாவட்ட செய்திகள்

ரூ.5 லட்சம் கேட்டு 2 வயது குழந்தை கடத்தல் 6 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர் + "||" + 2-year-old child trafficking

ரூ.5 லட்சம் கேட்டு 2 வயது குழந்தை கடத்தல் 6 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர்

ரூ.5 லட்சம் கேட்டு 2 வயது குழந்தை கடத்தல்  6 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர்
ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 2 வயது குழந்தையை புகார் அளித்த 6 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
ஆவடி, 

ஆவடியை அடுத்த சேக்காடு செந்தமிழ் நகர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராதிஷாம் (வயது 28). இவருடைய மனைவி ராக்கி பிரஜாபதி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராதிஷாம், வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஷானிகுமார் (21), மத்திய பிரதேசத்தில் வேலை செய்தபோது இவருக்கு பழக்கமானார். வேலை தேடி 10 நாட்களுக்கு முன்பு சென்னை வந்த ஷானிகுமார், ராதிஷாம் வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் ராதிஷாம் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது ஷானிகுமார், ராதிஷாமின் 2-வது மகனான அத்தீஷ் பிரஜாபதியை (2) கடைக்கு அழைத்து செல்வதாக கூறிச்சென்றார். அதன்பிறகு அவர் திரும்பிவரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டால் அவர் போனை எடுக்கவில்லை. குழந்தையுடன் அவர் மாயமாகிவிட்டார்.

ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்

இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிஷாம் நேற்று முன்தினம் இரவு ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது ராதிஷாமின் செல்போனில் தொடர்புகொண்ட ஷானிகுமார், “உனது குழந்தையை நான் கடத்தி வந்துவிட்டேன். ரூ.5 லட்சம் கொடுத்தால் குழந்தையை தருவேன். இல்லை குழந்தையை கொன்று விடுவேன்” என்று மிரட்டினார்.

இதுபற்றி ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து ஷானிகுமாரின் செல்போன் எண்ணை வைத்து ஆந்திர மாநிலம் நெல்லூர் ரெயில் நிலையம் அருகே உள்ள விடுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர். நேற்று அதிகாலையில் அங்கு சென்ற போலீசார், குழந்தையை பத்திரமாக மீட்டனர். ஷானிகுமாரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

புகார் அளித்த 6 மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.