கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வெறிச்சோடியது


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 19 March 2020 5:00 AM IST (Updated: 19 March 2020 2:28 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், ஜவுளிச்சந்தை மூடப்பட்டதால் வணிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு,

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள், ஜவுளிச்சந்தை ஆகியன மூடப்பட்டன. பொது இடங்களில் 5 பேருக்கும் மேல் யாரும் கூடி நிற்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், ஜவுளிக்கடைகளையும், நகைக்கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்து காணப்படுகிறது. இதனால் ஈரோடு கடை வீதி, நேதாஜி காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், ஜவுளி, எண்ணெய், மசாலா, முட்டை உள்ளிட்டவை கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களுக்கு அனுப்புவது தடைபட்டுள்ளது. இதேபோல் ஜவுளி ஏற்றுமதியும் தடைபட்டுள்ளதால் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

வணிகம் பாதிப்பு

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச்செயலாளர் சிவநேசன் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு காரணமாக ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை வரவேற்றாலும், தொழில்முனைவோர்கள், வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஜவுளித்துறை அதிகமாக பாதிக்கப்படும். வெளிநாடுகளுக்கு ஜவுளிகள் ஏற்றுமதி செய்வது தடைபட்டு உள்ளது. இதனால் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல ஈரோட்டில் இருந்து அரேபிய நாடுகளுக்கு மசாலா பொருட்கள் அனுப்புவது தடைபட்டுள்ளது.

அடுத்த வாரத்தில் இருந்து மஞ்சள் மார்க்கெட்டுகளும் மூடப்பட உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு காரணமாக தினமும் ரூ.25 கோடி வணிகம் பாதிக்கப்படுகிறது. இதேநிலை நீடித்தால் வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பு பொதுமக்களும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பறவைகள் சரணாலயம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு வருகின்றன. அதன்படி வெள்ளோடு பறவைகள் சரணாலயம் நேற்று முதல் மூடப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என்றும், 31-ந் தேதி வரை சரணாலயம் மூடப்படும் என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு வ.உ.சி. பூங்கா நடைபயிற்சி மைதானமும் மூடப்பட்டு உள்ளது. அங்கு தினமும் காலையிலும், மாலையிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 31-ந் தேதி வரை நடைபயிற்சி மையம் மூடப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பொதுத்தேர்வு

பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தாலும், பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வமாக கலந்துகொண்டு தேர்வை எழுதினர்.



Next Story