திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையை சேர்ந்தவர் கிருபராஜ். இவரது மகன் குபேந்திரன் (வயது 15). திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள மோதிரம் பேடு கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் சரவணன் (15). திருவள்ளூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் சரவணன் மற்றும் குபேந்திரன் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.
பொதுத்தேர்வு நடைபெற உள்ளதையொட்டி நேற்று சரவணன், குபேந்திரன் ஆகியோர் பள்ளிக்கு தங்களது நண்பர்களுடன் தேர்வு எழுதுவதற்காக ஹால் டிக்கெட்டை வாங்க சென்றார்கள். பின்னர் மாணவர்கள் அனைவரும் பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு செல்லும் புல்லரம்பாக்கம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளித்தனர்.
சாவு
கால்வாயில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததை கவனிக்காமல் சரவணன் மற்றும் குபேந்திரன் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றனர். நீரின் வேகத்தில் மாணவர்கள் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். சக மாணவர்கள் அவர்களை மீட்க முயற்சி செய்தும் முடியாததால் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தனர். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தண்ணீரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டது. பின்னர் தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி மாணவர்களின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து புல்லரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story