சென்னையில் போலி போலீஸ்காரர் நண்பருடன் கைது
சென்னையில் போலி போலீஸ்காரர் அவரது நண்பருடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
ரூ.8 லட்சம் கடன்
என்னிடம் டிரைவராக வேலை செய்த கார்த்திக் என்பவர், சொந்தமாக கட்டுமான தொழில் செய்வதாக கூறி ரூ.8 லட்சம் கடனாக வாங்கினார். அந்த கடனை திருப்பிக்கேட்டபோது, கார்த்திக் என்னை மிரட்ட ஆரம்பித்தார். மேலும் கார்த்திக் தனது நண்பரான விஜய்குமார் என்பவரை என்னிடம் அனுப்பி வைத்தார்.
விஜய்குமார், தன்னை போலீஸ்காரர் என்று கூறினார். கமிஷனர் அலுவலகத்தில் ரவுடிகள் ஒழிப்பு பிரிவில் வேலை செய்வதாகவும் தெரிவித்தார். கார்த்திக்கிடம் கொடுத்த ரூ.8 லட்சத்தை திருப்பிக் கேட்கக்கூடாது என்றும் அவர் மிரட்டினார். ஆனால் விஜய்குமார், போலீஸ்காரர் அல்ல. ரூ.8 லட்சத்தை மோசடி செய்யும் நோக்கத்துடன், தன்னை போலீஸ்காரர் என்று பொய் சொல்லி மிரட்டியுள்ளார். கார்த்திக் மீதும், போலி போலீஸ்காரர் விஜயகுமார் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கைது
இந்த மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, துணை கமிஷனர் நாகஜோதி, உதவி கமிஷனர் செல்வகுமார் ஆகியோர் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மோசடியில் ஈடுபட்ட கார்த்திக், அவரது நண்பர் விஜய்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story