அண்ணாநகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை கோரி வழக்கு - கலெக்டர் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை அண்ணாநகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் கலெக்டர் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை திருமால்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை அண்ணாநகர் 80 அடி சாலையில் ஏராளமான ஆஸ்பத்திரிகள், கணினி மையங்கள் உள்பட பல நிறுவனங்கள் அமைந்துள்ளன. எப்போதும் பரபரப்பான பகுதி ஆகும். கல்வி நிறுவனங்களும் இருப்பதால் மாணவ- மாணவிகள் வந்து செல்கின்றனர்.
ஏற்கனவே அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க ஐகோர்ட்டு தடை விதித்தது. இந்த நிலையில் இந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கடையை திறக்கக்கூடாது என டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே மதுரை அண்ணாநகர் 80 அடி சாலையில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், இதுதொடர்பாக கலெக்டர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story