‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் விபத்து படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷங்கர்- படக்குழுவினர் நடித்து காட்டினர்
‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினர் என 23 பேர் படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகி, விபத்து நடந்தது எப்படி? என மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் நடித்து காட்டினர்.
பூந்தமல்லி
பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இதற் காக பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. கடந்த மாதம் 19-ந் தேதி படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் உள்பட 3 பேர் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு சம்மன் அளித்து நேரில் அழைத்து விசாரணை செய்தனர்.
23 பேரிடம் விசாரணை
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினர் 24 பேர் விபத்து நடந்த படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராகி விபத்து குறித்து நடித்து காட்டி விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்திருந்தனர்.
இதில் நடிகர் கமல்ஹாசன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் இருந்து விலக்கு பெற்றார். இதனால் அவரை தவிர்த்து இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட 23 பேர் நேற்று விபத்து நடந்த படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜரானார்கள். அவர்களை படம்பிடிக்க ஈ.வி.பி. பிலிம் சிட்டியின் நுழைவுவாயிலின் முன்பு பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் கவனத்தை திசை திருப்பி சாதாரண காரில் இயக்குனர் ஷங்கர் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் உள்ளே சென்றுவிட்டனர்.
நடித்து காட்டினர்
பின்னர் படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடந்தது எப்படி?. விபத்து நடக்கும்போது யார், யார்? எங்கு இருந்தார்கள்?. கிரேன் எப்படி சாய்ந்தது? அதிக பாரம் ஏற்றியதால் சாய்ந்ததா? என மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் பல்வேறு கேள்விகளுக்கு இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினர் நடித்து காட்டினார்கள். இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அறிக்கைகள் தயாரித்து நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை முடிந்து இயக்குனர் ஷங்கர் சாதாரண காரில் யாருக்கும் தெரியாமல் திரும்பி சென்று விட்டார். வெளியாட்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் யாரும் உள்ளே செல்லாத வகையில் அனைத்து இடங்களிலும் போலீசார் மற்றும் ஈ.வி.பி. பிலிம் சிட்டி ஊழியர்கள் பாதுகாப்பு பனியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story