கொரோனா வைரஸ் அறிகுறியா? ஒரே நாளில் 71 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதி வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்தவர்கள்


கொரோனா வைரஸ் அறிகுறியா?   ஒரே நாளில் 71 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதி   வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்தவர்கள்
x
தினத்தந்தி 18 March 2020 10:45 PM GMT (Updated: 18 March 2020 10:04 PM GMT)

துபாய், இலங்கை, அபுதாபியில் இருந்து சென்னை வந்த 71 பேர் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என சோதனை செய்ய அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆலந்தூர், 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகள், நவீன கருவிகள் மூலம் தீவிர பரிசோதனைக்கு பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தநிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு அபுதாபி, இலங்கை, துபாய் ஆகிய பகுதிகளில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலையத்தில் உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவ குழுவினர் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.

71 பேர் அனுமதி

அப்போது இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகளில் பணியாற்றிய சுமார் 71 பேர் அந்த விமானங்களில் வந்திருந்தனர். இத்தாலி, பிரான்ஸ், டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளை மருத்துவ பரிசோதனையில் வைக்க மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளதால் இவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறதா? என்பதை கண்டறிய விமான நிலைய மருத்துவ குழுவினர் 71 பேரையும் பூந்தமல்லி பொது சுகாதார நிறுவனம் மற்றும் தாம்பரம் சானடோரியம் சிறப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 71 பேர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

3 பேர் மட்டும்

பூந்தமல்லி பொது சுகாதார நிறுவனத்தில் கடந்த 15-ந்தேதி முதல் நேற்று வரை 96 பேர் அழைத்து வரப்பட்டு 6 மணி நேரத்துக்கு ஒரு முறை 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டனர். அதில் 93 பேர் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது இந்த தனி சிறப்பு முகாமில் வயதான 3 பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் சுமார் 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். அதன்பிறகு அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என்பதை ஆய்வுசெய்த பிறகு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன் தெரிவித்தார்.

Next Story