செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 67 பேருக்கு பரிசோதனை கலெக்டர் ஜான்லூயிஸ் பேட்டி
செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 67 பேர் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஜான் லூயிஸ் தெரிவித்தார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
67 பேர் சோதனை
செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 67 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். டாக்டர் ஆலோசனையின்படி சிலர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள், சுகாதார பணிகள் குறித்து மாவட்டம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி துறைகளுக்கும் மாவட்ட அளவிலான கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.
விழிப்புணர்வு
நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு சுய சுகாதாரம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் கை கழுவ கிருமி நாசினிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மாவட்டம் முழுவதும் பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், தனியார் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிப்படுகிறது. நோய் அறிகுறி உள்ளவர்கள் தாம்பரம் அரசு நெஞ்சக நோய் ஆஸ்பத்திரியில் தனிமையில் வைத்து பரிசோதனை செய்யப்படுகிறார்கள். வெளிநாட்டில் இருந்து நோய் அறிகுறியுடன் வருபவர்களை கண்காணிக்க மாவட்ட துணை கலெக்டர்கள் 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தூய்மை பணி
முன்னதாக தாம்பரம் நகராட்சி சார்பில் ஆணையாளர் கருப்பையாராஜா தலைமையில் பஸ் நிலையம், நீதிமன்றம், தாசில்தார் அலுவலகம், கோட்டாச்சியர் அலுவலகத்தில் சுகாதார பிரிவு சார்பில் கொரோனா வைரசை தடுக்கும்பொருட்டு தூய்மை பணிகள் நடைபெற்றது.
இந்த பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story