மதுரை மகபூப்பாளையத்தில் நடந்து வரும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தை கைவிட பேச்சுவார்த்தை
மதுரை மகபூப்பாளையத்தில் நடந்து வரும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை கைவிடுமாறு ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மதுரை,
மதுரை மகபூப்பாளையத்தில் கடந்த 34 நாட்களாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பொது இடங்களில் கூடுவதற்கும், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக போராட்டத்தை கைவிட வலியுறுத்தி மதுரையில் போராட்டம் நடத்தி வருபவர்களுடன் ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படும். அதுவரை போராட்ட களத்தில் மக்கள் பங்கேற்க மாட்டார்கள்.
அதேநேரத்தில், போராட்ட பந்தலில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவம், ரத்த தான முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இது குறித்து, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
நாட்டு மக்களின் நலன் கருதி, கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கும் வரை போராட்டத்தை ஒத்தி வைப்பதற்கு ஒப்புக்கொண்டோம். ஆனால், போராட்டகளத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை மட்டும் அகற்ற முடியாது என்று தெரிவித்தோம்.
அதற்கு பதிலாக, அந்த இடத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரம், மருத்துவ முகாம், ரத்த தான முகாம் ஆகியன நடத்தப்படும் என்றும் தெரிவித்தோம். இதற்கு ஆர்.டி.ஓ. மற்றும் போலீஸ் தரப்பில் முதலில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதற்கான ஒப்புதல் அறிக்கையில் கையெழுத்திடும் முன்னதாக திடீரென்று உயரதிகாரிகள் போராட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதற்கு மறுப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து விட்டோம். குடியுரிமை திருத்த சட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெறும். போலீசார் எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் கவலையில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையில், போராட்டக்குழு தலைவர் நிஜாம் அலி, முஜிபுர்ரகுமான், முகமது கவுஸ், வக்கீல்கள் ஹென்றிதிபேன், வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போலீஸ்தரப்பில் திலகர்திடல் உதவி கமிஷனர் வேணுகோபால் கலந்து கொண்டார்.
Related Tags :
Next Story