மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 March 2020 10:30 PM GMT (Updated: 19 March 2020 2:41 PM GMT)

செந்துறை அடுத்த வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆற்றில் இறங்கி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செந்துறை, 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதியில் வெள்ளாறு ஓடுகிறது. இந்த வெள்ளாறு பகுதியில் மணல் குவாரி அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி தளவாய் கூடலூர் பகுதியில் மணல் குவாரி அமைக்க இடத்தை தேர்வு செய்து அத்து கற்களை நட்டு உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி விவசாயிகள் ஆற்றிற்கு சென்று மணல் குவாரி அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று தளவாய் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆற்றில் இறங்கி கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், தளவாய், கூடலூர், ஈச்சங்காடு உள்ளிட்ட 7 கிராமங்களுக்கும் இங்கிருந்து தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளாற்றின் கரையோரமாக 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி மூன்றுபோகமும் விவசாயம் செய்து வருகிறோம்.

இப்பகுதி மக்கள் முழுமையாக விவசாயத்தை நம்பி உள்ளனர். மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் அதளபாதாளத்திற்கு சென்று குடிநீர் தட்டுப்பாடு, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே சன்னாசிநல்லூர் பகுதியில் 30 அடி ஆழம்வரை மணல் எடுத்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் நீர்மட்டம் குறைந்த காரணத்தினால் தமிழக அரசிடம் போராடி தற்போது தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தெத்தேரி, செங்கமேடு, ஆலத்தியூர் பகுதியிலும் மணல் குவாரி அமைத்து மணல் எடுத்துள்ளனர். தற்போது செங்கமேடு, தளவாய், கூடலூர் இடையே மட்டுமே மணல் உள்ளது. இப்பகுதியில் மணல் எடுத்துவிட்டால் இப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றனர்.

ஊராட்சி மன்ற தலைவரே ஆற்றில் இறங்கி பொதுமக்களுடன் இணைந்து அரசு மணல் குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story