இ-சேவை, ஆதார் மையங்களை வருகிற 31-ந் தேதி வரை மூட வேண்டும்; கலெக்டர் உத்தரவு
கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள இ-சேவை, ஆதார் மையங்களை வருகிற 31-ந் தேதி வரை மூட வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்,
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள், அங்கன்வாடி மையங்கள், விளையாட்டு அரங்குகள், டாஸ்மாக் பார்கள், உயிரியல் பூங்காங்கள், அருங்காட்சியகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் வருகிற 31-ந் தேதி வரை மூட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் காளைவிடும் திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் போராட்டம், ஊர்வலங்கள் நடத்த அனுமதி கிடையாது. திருமண மண்டபங்களில் திருமணத்தை தவிர வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது. மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், விவசாயிகள் கூட்டம், மனுநீதி நாள் முகாம் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்தார். மேலும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தினார்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் மாவட்ட எல்லைப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக இருக்கும்படி சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான இ-சேவை மையங்கள், ஆதார் மையங்களை வருகிற 31-ந் தேதி வரை மூட வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் கலெக்டர் அலுவலக வளாகம், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் இயங்கும் இ-சேவை மையம், ஆதார் மையங்கள் மூடப்பட்டன. இந்த மையங்களுக்கு வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இ-சேவை, ஆதார் மையங்களின் செயல்பாடு குறித்து மறுஉத்தரவு வரும் வரை பொதுமக்கள் வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story