சென்டிரல் ரெயில் நிலையத்தில் 5 வயது மகளை தவறவிட்ட தம்பதி ஆந்திராவில் போலீசார் மீட்பு
சென்டிரல் ரெயில் நிலையத்தில் பீகார் மாநில தம்பதியினர் தங்களின் 5 வயது மகளை தவறவிட்டனர்.
சென்னை,
பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனோஜ்குமார் தனது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையம் வந்தார்.
அவர் செல்ல இருந்த ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் 6-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. அவர்கள் ரெயிலில் ஏறினர். அப்போது மனோஜ் குமாரின் மகள் திடீரென மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரெயில் நிலையம் முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் அவரது மகள் கிடைக்கவில்லை.
இதையடுத்து சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான போலீசார் ரெயில் நிலையத்தின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அவரது மகள் 7-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்த ஐதராபாத் செல்லும் ரெயிலில் ஏறி சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவரது மகளின் புகைப்படம் மற்ற ரெயில்வே போலீஸ் நிலையங்களுக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை ஆந்திர மாநிலம் ராமகுண்டம் ரெயில் நிலையத்தில் ராமகுண்டம் ரெயில்வே போலீசார் சிறுமியை மீட்டனர். தகவல் கிடைத்து சென்டிரல் ரெயில்வே போலீசார் ராமகுண்டம் சென்று சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story