ஓசூரில் மினி லாரியில் ஏற்றி சென்ற கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 10 கடைகள், 14 வாகனங்கள் எரிந்து சேதம்


ஓசூரில் மினி லாரியில் ஏற்றி சென்ற கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 10 கடைகள், 14 வாகனங்கள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 20 March 2020 5:30 AM IST (Updated: 20 March 2020 1:28 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் மினி லாரியில் ஏற்றி சென்ற கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 10 கடைகள், 14 வாகனங்கள் எரிந்து சேதம் ஆனது.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ளது நெலமங்கலம். இங்குள்ள கியாஸ் குடோனில் இருந்து தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த கூடிய 450 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் ஒன்றை மினிலாரியில் ஏற்றிக் கொண்டு நேற்று காலை ஓசூருக்கு கொண்டு வந்தனர்.

அந்த மினிலாரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியில் குடியிருப்புகள், கடைகள் உள்ள பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வேகத்தடை ஒன்றில் லாரி ஏறி குலுங்கியது. இதில் எதிர்பாராதவிதமாக வண்டியில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. இதை அறிந்த டிரைவர் உடனடியாக மினி லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.

4 பேர் பலத்த காயம்

இந்த நிலையில் சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியேறியது. சிறிது நேரத்தில் அதில் குபீரென்று தீப்பிடித்தது. இதில் மினிலாரியிலும் தீ மளமளவென பற்றி எரிந்தது. மேலும், சாலையின் 2 புறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 மோட்டார்சைக்கிள்கள், ஒரு ஆட்டோ ஆகியவை தீப்பிடித்து எரிந்தது. அதேபோல சாலையின் இருபுறமும் இருந்த துணிக்கடை, ஓட்டல், மருந்து கடை, சிக்கன் கடை, மளிகை கடை என 10-க்கும் மேற்பட்ட கடைகளை தீ சூழ்ந்தது.

இதனால் கடையில் இருந்தவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என வெளியே தப்பி ஓடினர். இதற்கிடையே அந்த பகுதி முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. எங்கு பார்த்தாலும் புகைமூட்டமாக இருந்தது. இந்த பயங்கர தீ விபத்தில் அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடையில் இருந்த மஞ்சுளா (25), அசாம் மாநில ஓட்டல் தொழிலாளி சம்சருத் (32), சாலையோரம் நின்ற சிறுவர்கள் அஸ்வா (13), ரவிகிரண் (8) ஆகிய 4 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

ஆடு, கோழிகள் செத்தன

அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சாலையின் 2 புறமும் தடுப்புகளை வைத்து பொதுமக்கள் யாரும் அங்கு செல்லாதபடி தடுத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு ஓசூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இதில் கோழிக்கடை, ஆட்டுக்கடையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் முழுமையாக எரிந்து செத்தன. சம்பவ இடத்திற்கு ஓசூர் தாசில்தார் செந்தில்குமரன் தலைமையிலான அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள்.

ரூ.50 லட்சம் சேதம்

இந்த தீ விபத்தால் ஓசூர் அலசநத்தம் பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. இதில் கியாஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற மினிலாரி, 10 கடைகள், 12 மோட்டார்சைக்கிள்கள், ஒரு ஆட்டோ ஆகியவை எரிந்து சேதமடைந்தது. அவற்றின் மதிப்பு ரூ.50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. மினி லாரியில் ஏற்றி சென்ற கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story