வாலாஜாபாத் பஸ்நிலையம் அருகே பயன்பாடின்றி காணப்படும் கழிப்பிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


வாலாஜாபாத் பஸ்நிலையம் அருகே   பயன்பாடின்றி காணப்படும் கழிப்பிடம்   நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 19 March 2020 10:30 PM GMT (Updated: 19 March 2020 8:59 PM GMT)

வாலாஜாபாத் பஸ்நிலையம் அருகே பயன்பாடின்றி காணப்படும் கழிப்பிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாலாஜாபாத், 

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே வாலாஜாபாத் தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்களும், வணிக, வியாபார நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக வாலாஜாபாத் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வாலாஜாபாத் பஸ் நிலையத்திற்கு் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் வாலாஜாபாத் பகுதிக்கு பல்வேறு பணிகள் காரணமாக வரும் பொதுமக்கள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இடமில்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்..

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே பல லட்சம் ரூபாய் செலவில் வாலாஜாபாத் பஸ் நிலையம் எதிரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் சுகாதார கழிப்பிடம் கட்டப்பட்டது.

சுகாதார கழிப்பிட வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக முறையாக பயன்படுத்தாத நிலையில் பழுதடைந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொதுமக்களின் வருகையால் வாலாஜாபாத் பஸ் நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கழிப்பிடத்தை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story