அரசு அதிகாரியின் வாகன கண்ணாடியை உடைத்து பெண் போலீசை தாக்கிய வாலிபர் கைது


அரசு அதிகாரியின் வாகன கண்ணாடியை உடைத்து பெண் போலீசை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 March 2020 5:00 AM IST (Updated: 20 March 2020 3:02 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரியின் வாகன கண்ணாடியை உடைத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசை தாக்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

வீரபாண்டி,

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்களும் வந்தனர். அப்போது காலை 9.30 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு வாலிபர் வந்தார். கலெக்டர் அலுவலக பிரதான வாசல் முன்பு புள்ளியல் துறை உதவி இயக்குனரின் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது. வாலிபர் தான் கொண்டு வந்த இரும்பு கம்பி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயன்படுத்தும் இரும்பு சங்கிலி ஆகியவற்றைக்கொண்டு வாகனத்தின் முன்புற கண்ணாடி மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை அடித்து நொறுக்கினார்.

இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை பெண் போலீஸ் சாந்தி கவனித்து அந்த வாலிபரை தடுக்க முயன்றார். ஆனால் அந்த வாலிபரோ தான் வைத்திருந்த இரும்பு சங்கிலியால் சாந்தியை தாக்கினார். இதில் அவர் கையில் காயம் ஏற்பட்டது.

கண்ணாடி உடைப்பு

இதனால் அங்கிருந்தவர்கள் பீதி அடைந்தனர். பின்னர் அந்த வாலிபர் கலெக்டர் அலுவலக கட்டிடத்துக்குள் நுழைந்து வாசலின் இடதுபுறம் உள்ள கண்ணாடியை உடைத்தார். மேலும் வரவேற்பு அறையில் பொருத்தப்பட்டு இருந்த கண்ணாடியையும் உடைத்து நொறுக்கினார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

நேரம் செல்ல செல்ல வாலிபரின் சேட்டை அதிகரித்ததால் அங்கிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

அறிவியல் கண்டுபிடிப்பு

அப்போது அந்த வாலிபர், ‘தான் எலெக்ட்ரான் என்ற அறிவியல் மூலக்கூறு கண்டுபிடித்துள்ளதாகவும், அதனால் மனிதன் இளமையாக எப்போதும் இருக்க முடியும் என்றும், தனது கண்டுபிடிப்பை பலர் திருட முயற்சி செய்வதாகவும் கூறினார். மேலும் இதுகுறித்து ஜனாதிபதிக்கும், இந்திய விமானப்படை தலைவருக்கும் அனுப்பி வைத்ததாகவும், ஆனால் யாரும் தனது கண்டுபிடிப்பை மதிக்காமல் இருந்ததால் நியாயம் கேட்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததாகவும் கூறினார்.

சம்பவம் பற்றி அறிந்ததும் வீரபாண்டி போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்தனர். போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் வந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார். அதன்பிறகு வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு அந்த வாலிபரை அழைத்துச்சென்று விசாரித்தனர்.

வாலிபர் கைது

விசாரணையில் அவர் சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த இளங்கோ (வயது 30) என்பதும், இவர் கடந்த 4 வருடங்களாக திருப்பூரில் பழைய பஸ் நிலையம் பின்புறம் தங்கி இருந்து பெயிண்டர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர் 3-ம் வகுப்பு வரை படித்துள்ளார். மாறி, மாறி பேசி வருவதால் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் டாக்டர் பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்று போலீசார் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து வீரபாண்டி கிராம நிர்வாக அதிகாரி நீலகண்டன் கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார், இளங்கோ மீது அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரை தாக்கியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்தது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துஅவரை கைது செய்தனர். கலெக்டர் அலுவலகத்தில் புகுந்து ஜீப் கண்ணாடியை உடைத்து பெண் போலீசை தாக்கிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story