கர்நாடகத்திற்கு மத்திய அரசு இழைக்கும் அநீதி இல்லையா? 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி ரூ.11 ஆயிரம் கோடி இழப்பு பட்ஜெட் மீதான விவாதத்தில் சித்தராமையா பேச்சு


கர்நாடகத்திற்கு மத்திய அரசு இழைக்கும் அநீதி இல்லையா?   15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி ரூ.11 ஆயிரம் கோடி இழப்பு   பட்ஜெட் மீதான விவாதத்தில் சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 20 March 2020 5:33 AM IST (Updated: 20 March 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி கர்நாடகத்திற்கு ரூ.11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில் சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. 5-ந் தேதி முதல்-மந்திரி எடியூரப்பா பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த கூட்டத்தொடரின் 14-வது நாள் கூட்டம் விதான சவுதாவில் நேற்று காலை 11 மணியளவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பங்கேற்று பேசியதாவது:-

5 டிரில்லியன் டாலர் (சுமார் 375 லட்சம் கோடி) பொருளாதார இலக்கை அடைய முயற்சி செய்து வருவதாக பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு ஏற்ப மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக அதன் வளர்ச்சி சரிந்துள்ளது. வளர்ச்சி ஏறுமுகத்தில் இல்லை. இறங்குமுகத்தில் இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.9 சதவீதமாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்கு சரக்கு-சேவை வரி திட்டம் மற்றும் பண மதிப்பிழப்பு திட்டம் ஆகியவை தான் முக்கிய காரணம் ஆகும்.

வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை

வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. மாறாக இருந்த வேலைகள் பறிபோய் உள்ளன. பெங்களூரு பீனியாவில் அதிக எண்ணிக்கையில் தனியார் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதாக பிரதமர் மோடி கூறினார். அந்த வாக்குறுதியையும் பிரதமர் நிறைவேற்றவில்லை. தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி இருக்காது.கர்நாடகத்திற்கு மத்திய அரசு வழங்கும் வரி பங்கையும் குறைத்துவிட்டது. இந்த ஆண்டு மத்திய அரசுக்கு ரூ.2.26 லட்சம் கோடி வரி வசூல் குறைந்துள்ளது.

வளர்ச்சி குறைந்துவிட்டது

இதனால் சரக்கு-சேவை வரி திட்டத்தில் கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டு தொகையில் ரூ.3 ஆயிரம் கோடி கிடைக்கவில்லை. வரி பங்கில் ரூ.8 ஆயிரம் கோடியை குறைத்துள்ளனர். கர்நாடகத்திற்கு கடந்த ஆண்டு ரூ.35 ஆயிரத்து 895 கோடி வந்துள்ளது. இதிலும் ரூ.1,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.39 ஆயிரத்து 816 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

ஆனால் ரூ.30 ஆயிரத்து 914 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் மட்டும் சுமார் ரூ.9 ஆயிரம் கோடியை குறைத்துள்ளனர். இதை வருகிற நிதி ஆண்டில் (2020-21) ரூ.28 ஆயிரத்து 599 கோடியாக குறைத்துவிட்டனர். இதனால் ரூ.11 ஆயிரத்து 215 கோடி நிதி குறையும். கர்நாடகம் வாங்கியுள்ள கடனுக்கு அசலும், வட்டியும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.33 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும். கர்நாடகத்தில் தற்போது பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது.

மிகப்பெரிய சுமை

நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் முதல் பட்ஜெட்டின் அளவு ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடியாக இருந்தது. அதே ஆட்சியில் கடைசி பட்ஜெட்டின் அளவு ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் கோடி. எனது ஆட்சியில் மாநிலத்தின் பொருளாதாரம் நல்ல முறையில் வளர்ச்சி கண்டது. மத்திய அரசின் முட்டாள்தனமான பொருளாதார கொள்கையால் வரி வருவாய் குறைந்துள்ளது. 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி கர்நாடகத்திற்கு ரூ.11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதை சரிசெய்ய அந்த குழு, ரூ.5,500 கோடி கர்நாடகத்திற்கு வழங்குமாறு ஆலோசனை கூறியுள்ளது. ஆனால் இந்த தொகையை வழங்க இயலாது என்று அந்த குழுவுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடிதம் எழுதியுள்ளார். இது கர்நாடகத்திற்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா?. இதை பார்த்துக் கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமா?. இதனால் கர்நாடகத்தின் மீது மிகப்பெரிய சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தின் கடன் 2023-24-ம் ஆண்டில் ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்து 424 கோடியாக அதிகரிக்கும்.

இருண்ட காலங்கள்

நமது பட்ஜெட்டில் 90 சதவீத நிதி, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர செலவுகளுக்கு செல்கிறது. மீதம் 10 சதவீதம் தான் (அதாவது ரூ.22 ஆயிரம் கோடி) உள்ளது. இதை வைத்துக் கொண்டு அரசு திட்டங்களை செயல்படுத்த முடியுமா?. பல்வேறு திட்டங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். இந்த அரசு எங்கிருந்து நிதியை திரட்ட போகிறது?. கிருஷ்ணா மேல் அணை திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடியை வழங்குவதாக எடியூரப்பா அறிவித்துள்ளார். நிதி எங்கே இருக்கிறது?. அடுத்து வரும் நாட்களில் கர்நாடகத்திற்கு இருண்ட காலங்கள் காத்திருக்கின்றன.

தேவையற்ற செலவுகளை குைறக்க வேண்டும். சரக்கு-சேவை வரி திட்டத்தில் இருக்கும் சிக்கல்களை தீர்க்க வேண்டும். நமக்கு ஏற்பட்டுள்ள அநீதியை எடுத்துக்கூறி மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி உதவி பெற போராட வேண்டும். வரி அல்லாத வருவாயை பெருக்க வேண்டும். பொதுவாக பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்குவது வழக்கம். ஆனால் இந்த முறை துறை வாரியாக அல்லாமல், 6 மண்டலங்களாக பிரித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Next Story