அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்


அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 March 2020 5:57 AM IST (Updated: 20 March 2020 5:57 AM IST)
t-max-icont-min-icon

அவசியம் இல்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.

புதுச்சேரி,

உலகையே அச்சுறுத்தி்க் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் புதுவை அரசு இறங்கி உள்ளது. இதற்காக அரசு துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று இரவு ஒவ்வொரு பகுதியாக சென்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதற்காக தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அவர் நீடராஜப்பையர் வீதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றார். அங்கு கை கழுவும் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டார்.

பின்னர் அங்கு வந்து இருந்த பொதுமக்களிடம் கூட்டமாக கடைக்கு வர வேண்டாம். கூடுமான வரை கூட்டம் சேர வேண்டாம் என்றார்.

பெண்களிடம் விசாரணை

பின்னர் அங்கிருந்து புதிய பஸ்நிலையத்திற்கு சென்றார். அங்கு எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த பெண்களிடம், கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக கேட்டறிந்தார்.

தொடர்ந்து கோரிமேடு, காலாப்பட்டில் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூத்துகளை பார்வையிட்டார். அங்கு மேற்கொள்ளப்படும் சோதனைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெளிநாட்டு பயணிகள்

புதுவையில் அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் திண்டிவனம், கிழக்கு கடற்கரை சாலை, கடலூர், விழுப்புரத்தில் இருந்து புதுவை வரும் பயணிகளை கண்காணிக்க மாநில எல்லைகளில் பூத்துகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேர பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை கண்காணித்து யார் எல்லாம் உடனடியாக வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்களின் பின்னணி என்ன? எந்த நாட்டில் இருந்து வந்துள்ளனர் என்பன போன்ற விவரங்களை சேகரிக்கின்றனர். இதுபற்றிய தகவல்களை ஒரு செயலி மூலம் மருத்துவ அதிகாரிகளுக்கு அனுப்புகின்றனர். மருத்துவ அதிகாரிகள், தேவைப்பட்டால் அந்த பயணிகளை 14 நாட்கள் தனி இடங்களில் வைத்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

144 தடை உத்தரவு

நானும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் அதிகாரிகளும் மாகி பகுதிக்கு சென்று ஆய்வு செய்தோம். வெளிமாநிலத்தில் இருந்து மாகி வந்த 127 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதை கண்காணிக்க 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏனாமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள், மால்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், கோவில்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண விழாக்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கோவில் கும்பாபிஷேகங்களை தற்ேபாது நடத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரூ.17½ கோடி

புதுவை மாநிலத்தில் கடைகளை மூடி விடுவார்கள் என்று மக்கள் மத்தியில் பீதி உள்ளது. நாங்கள் கடைகளை மூட மாட்டோம். யாரும் பயப்பட வேண்டாம். புதுவையில் பாதுகாப்பு கவசங்கள், தேவையான உபகரணங்கள், முகமூடி வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரிடர் துறையின் மூலமாக புதுவைக்கு ரூ.10 ேகாடி ஒதுக்கப்படும். மருத்துவ துறையின் மூலம் ரூ.7½ கோடி ஒதுக்க உள்ளோம். புதுவைக்கு மொத்தம் ரூ.17½ கோடி ஒதுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story