நடிகர் ஷாருக்கான் பங்களா அருகே, அடுக்குமாடி கட்டிடத்தில் தீ; வெளிநாட்டு பெண் பலி


நடிகர் ஷாருக்கான் பங்களா அருகே, அடுக்குமாடி கட்டிடத்தில் தீ; வெளிநாட்டு பெண் பலி
x
தினத்தந்தி 20 March 2020 6:11 AM IST (Updated: 20 March 2020 6:11 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ஷாருக்கான் பங்களா அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பெண் பலியானார். மேலும் வேலைக்கார பெண் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.

மும்பை, 

மும்பை பாந்திரா பேண்டு ஸ்டான்டு பகுதியில் உள்ள நடிகர் ஷாருக்கானின் ‘மன்னத்' பங்களா அருகில் ஸ்பிரிங் பில்டிங் என்ற 7 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 7-வது மாடியில் இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த இவானா மொரிசி(வயது20) என்ற இளம்பெண் வசித்து வந்தார்.

இவரது வீட்டில் நேற்று காலை 7.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மள, மள வென வீடு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. அப்போது, வீட்டில் இவானா மொரிசி, வேலைக்கார பெண் சிப்ரா ஜாப்ரி(38) ஆகியோர் இருந்தனர். இருவரும் தீயில் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தீக்காயங்களுடன் கிடந்த இவானா மொரிசி மற்றும் வீட்டு வேலைக்கார பெண் சிப்ரா ஜாப்ரியை மீட்டு பாபா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டா்கள் இவானா மொரிசி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். 90 சதவீதத்திற்கு மேல் உடலில் தீக்காயம் அடைந்த வேலைக்கார பெண் சிப்ரா ஜாப்ரிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story