கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடைகள் அடைப்பு; மின்சார ரெயில்களில் கூட்டம் குறைந்தது - மும்பை நகரம் வெறிச்சோடியது


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடைகள் அடைப்பு; மின்சார ரெயில்களில் கூட்டம் குறைந்தது - மும்பை நகரம் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 20 March 2020 7:00 AM IST (Updated: 20 March 2020 7:00 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மும்பை உள்பட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. மின்சார ரெயில்களில் கூட்டம் குறைந்தது. இதன் காரணமாக மும்பை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

மும்பை, 

உலகை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி வைரஸ் கொரோனா இந்தியாவிலும் பரவி உள்ளது. குறிப்பாக மராட்டியத்தில் தீவிரமாக பரவி வருவதால், தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மார்க்கெட், கடைகளை அடைக்க வலியுறுத்தப்பட்டது.

இதனையொட்டி நேற்று தாதர் ரானடே சாலையில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இங்கு ஒருநாள் விட்டு ஒருநாள் கடைகள் அடைக்கப்படுவதாகவும், இது வருகிற 25-ந்தேதி வரை தொடரும் எனவும் வணிகர் சங்க அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

31-ந்தேதி வரை...

இதுதவிர நேற்று மும்பையில் தாதர், மாட்டுங்கா, தாராவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சியின் அறிவுறுத்தலின் பேரில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அங்குள்ள சந்தை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பெரும்பாலான இடங்களில் மருந்துகடை, மளிகை கடை போன்ற அத்தியாவசிய தேவைகள் உள்ள கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. நடைபாதை வியாபாரிகளும் கடைகளை மூட மாநகராட்சியினர் உத்தரவிட்டு உள்ளனர். எனவே நேற்று மும்பையில் நடைபாதைகளும் வியாபாரிகளும் கடைகளை மூடியிருந்தனர்.

இதேபோல தானே மாவட்டம் கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளும் இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பால்கர் மாவட்டம் வசாய்-விரார் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முதல் கடைகள் அடைக்கப்பட்டன. இதுபோல மாநிலம் முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

வெறிச்சோடியது

இந்தநிலையில் ஆட்கொல்லி வைரஸ் கொரோனாவால் மும்பை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. தினமும் திரளான மக்கள் வந்து செல்லும் கேட்வே ஆப் இந்தியா, கிர்காவ், மெரின்டிரைவ், ஜூகு, தாதர் சிவாஜி பார்க் கடற்கரைகள் கூட ஆள் நடமாட்டம் இன்றி காணப்படுகின்றன. முக்கிய சாலைகள் வாகனங்கள் இன்றி காட்சி அளித்தன.

இதேபோல நிற்க கூட இடமில்லாமல் செல்லும் மின்சார ரெயில்களில் தற்போது பயணிகள் கூட்டம் கணிசமாக குறைந்து உள்ளது. ரெயில்நிலையங்களிலும் குறைந்த அளவே மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

Next Story