கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தூத்துக்குடி சிவன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்:  தூத்துக்குடி சிவன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து
x
தினத்தந்தி 21 March 2020 4:00 AM IST (Updated: 20 March 2020 5:53 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தூத்துக்குடி சிவன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தூத்துக்குடி சிவன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் 

கொரோனா வைரஸ் உலகத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் ஏற்படும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான கோவில்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்தையும் வருகிற 31–ந்தேதி வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

அனுமதி ரத்து 

அதன்படி, தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் நேற்று முதல் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி, பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத வகையில் கோவில் நுழைவுவாயில் முன்பு இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரும்பு தடுப்புக்கு முன்பு நின்று சாமியை தரிசித்து செல்கிறார்கள். அதே நேரத்தில் கோவிலில் வழக்கம்போல் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வருகிற 31–ந்தேதி வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

விழிப்புணர்வு கூட்டம் 

மேலும் நகரில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி அருகே உள்ள எம்.தங்கம்மாள்புரத்தில் உள்ள கோவில் வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமை தாங்கினார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் கை கழுவுவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன், தங்கம்மாள்புரம் ஊர் தலைவர் சிவலிங்கம், செயலாளர் வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story