கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
x
தினத்தந்தி 21 March 2020 4:00 AM IST (Updated: 20 March 2020 6:09 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

திருச்செந்தூர், 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வருகிற 31–ந்தேதி வரையிலும் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், சந்தைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், ஆன்மீக தலங்களிலும் வருகிற 31–ந்தேதி வரையிலும் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் உச்சிகால பூஜையை தொடர்ந்து மற்றகால பூஜைகள் வழக்கம்போல் நடந்தது.

பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு 

எனினும் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலின் தெற்கு, வடக்கு நுழைவு வாயில்களிலேயே பக்தர்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் அங்கேயே நின்று, கோவிலை பார்த்து வழிபட்டு திரும்பி சென்றனர்.

கோவிலில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோவில் வளாகம், கடற்ரை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடியது. அங்கு கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குலசேகரன்பட்டினம் கோவில் 

இதேபோன்று குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலிலும் பக்தர்களை அனுமதிக்கவில்லை. நேற்று பங்குனி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் முன்மண்டபத்திலேயே அமர்ந்து வழிபட்டு சென்றனர். சில பக்தர்கள் கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் முடிகாணிக்கை செலுத்தி விட்டு, கோவிலின் முன்பு நின்று வழிபட்டு திரும்பினர். அங்கு பக்தர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. கோவிலில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெற்றது.

இதேபோன்று கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் பக்தர்களின் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், வருகிற 31–ந்தேதி வரையிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story