கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாகர்கோவிலில் 4 மீன் சந்தைகள் மூடல்


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாகர்கோவிலில் 4 மீன் சந்தைகள் மூடல்
x
தினத்தந்தி 21 March 2020 3:45 AM IST (Updated: 20 March 2020 7:38 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாகர்கோவிலில் 4 மீன் சந்தைகள் மூடப்பட்டன. மேலும் குளிரூட்டப்பட்ட கடைகளையும் அடைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நாகர்கோவில்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பள்ளி- கல்லூரிகள், மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள் (மால்கள்), விளையாட்டு அரங்கம், கேளிக்கை விடுதிகள், டாஸ்மாக் மற்றும் ஓட்டல் பார்கள், கிளப்புகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கோவில்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தில் சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம். அதிலும் மீன் சந்தைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே மீன்சந்தைகளில் கூடும் கூட்டங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பெரிய மீன் சந்தைகள் அனைத்தையும் மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி நேற்று நாகர்கோவில் வடசேரி மீன் சந்தை, கணேசபுரம் மீன் சந்தை, ராமன்புதூர் மீன் சந்தை, வேதநகர் மீன்சந்தை ஆகிய 4 மீன் சந்தைகளும் நேற்று மூடப்பட்டன. வருகிற 31-ந் தேதி வரை இந்த மீன் சந்தைகள் மூடியிருக்கும் என்று கூறப்படுகிறது இதனால் மீன் சந்தைக்கு மீன்களை கொண்டு வந்த வியாபாரிகள் சந்தைக்கு வெளியே அமர்ந்து மீன்கள் விற்பனை செய்ததை காண முடிந்தது.

தாமதமாக மீன் சந்தைகளுக்கு வந்தவர்கள், சந்தைகள் அடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மேலும் அத்தியாவசிய தேவையற்ற பொருட்கள் விற்பனை செய்யும் குளிரூட்டும் வசதியுடன் கூடிய செருப்புக்கடைகள், கவரிங் நகை கடைகள், வாட்ச் கடைகள் போன்றவற்றையும் மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நாகர்கோவில் நகரப்பகுதிகளில் உள்ள லாட்ஜ், ஓட்டல்களில் சந்தேகப்படும்படியாக, கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் யாராவது தங்கியிருந்தால் அதுகுறித்து உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என லாட்ஜ் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் ஓட்டல்கள், காய்கறி சந்தைகள், மளிகை கடைகள், அரிசி கடைகள், மருந்துக் கடைகள் போன்றவற்றில் குளிரூட்டும் வசதி இருந்தாலும் அவை தொடர்ந்து செயல்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story