வள்ளியூரில் பரபரப்பு அரசு உத்தரவை மீறி செயல்பட்ட வாரச்சந்தை பாதியில் நிறுத்தம் வியாபாரிகள்–பொதுமக்கள் வெளியேற்றம்


வள்ளியூரில் பரபரப்பு அரசு உத்தரவை மீறி செயல்பட்ட  வாரச்சந்தை பாதியில் நிறுத்தம் வியாபாரிகள்–பொதுமக்கள் வெளியேற்றம்
x
தினத்தந்தி 21 March 2020 4:00 AM IST (Updated: 20 March 2020 8:02 PM IST)
t-max-icont-min-icon

வள்ளியூரில் நேற்று அரசு உத்தரவை மீறி செயல்பட்ட வாரச்சந்தையை போலீசாரும், பேரூராட்சி அதிகாரிகளும் பாதியில் தடுத்து நிறுத்தினர்.

வள்ளியூர், 

வள்ளியூரில் நேற்று அரசு உத்தரவை மீறி செயல்பட்ட வாரச்சந்தையை போலீசாரும், பேரூராட்சி அதிகாரிகளும் பாதியில் தடுத்து நிறுத்தினர். வாரச்சந்தைக்கு வந்திருந்த வியாபாரிகளும், பொதுமக்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

வாரச்சந்தை கூடியது 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அதிக அளவில் மக்கள் மற்றும் வியாபாரிகள் கூடக்கூடிய வாரச்சந்தைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வழக்கம் போல் ‘வெள்ளிக்கிழமை சந்தை’ நேற்று காலை 5 மணிக்கு கூடியது. முதலில் ஆட்டு சந்தையும், 9 மணி முதல் காய்கறி சந்தையும் நடைபெறுவது வழக்கம். எனவே முதலில் கூடிய ஆட்டுச்சந்தையில் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் கூடியிருந்தனர். ஆடுகள் விற்பனை வறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அருகில் காய்கறி சந்தைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

அதிகாரிகள் எச்சரிக்கை 

அரசு தடையை மீறி வாரச்சந்தை நடைபெறுவதை அறிந்த போலீசாரும், பேரூராட்சி அதிகாரிகளும் வாரச்சந்தை பகுதிக்கு வந்தனர். உடனடியாக அனைவரும் வாரச்சந்தையை முடித்து கொண்டு கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு கூடியிருந்த பொதுமக்களையும், வியாபாரிகளையும் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். சந்தைக்கு கொண்டு வரப்பட்டிருந்த காய்கறிகள் வாகனங்களில் ஏற்றி திருப்பி எடுத்துச் செல்லப்பட்டன. சுமார் அரை மணி நேரத்தில் அந்த பகுதி வெறிச்சோடியது. வாரச்சந்தை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் மீண்டும் வாரச்சந்தை கூடி விடாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story