பிரசித்திபெற்ற வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்தியம்பெருமான் திருக்கல்யாண உற்சவத்துக்கு தடை


பிரசித்திபெற்ற வைத்தியநாத சுவாமி கோவிலில்  நந்தியம்பெருமான் திருக்கல்யாண உற்சவத்துக்கு தடை
x
தினத்தந்தி 21 March 2020 4:00 AM IST (Updated: 20 March 2020 8:10 PM IST)
t-max-icont-min-icon

பிரசித்திபெற்ற வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்தியம்பெருமான் திருக்கல்யாணம் உற்சவம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதனைஅனுமதிக்குமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலமான வைத்தியநாத சுவாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் அஷ்டமி, நவமி திதியில் நந்தியம்பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியானது காலங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு வருகிற 31-ந் தேதி வரை கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் அனைத்திற்கும் தடை விதித்துள்ளது. தற்போது அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி திருக்கல்யாணம் வருவதால் இது குறித்து மாவட்ட அரசானது தடை காலம் நீடிக்க கூடும், எனவே இந்த ஆண்டு திருக்கல்யாணம் நடத்தாதீர்கள் என கோவில் நிர்வாகத்திற்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோவில் நிர்வாகத்தினர் திருக்கல்யாணதிற்கான அனைத்து வேலைகளையும் நிறுத்தி வைத்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடக்கும் இந்த நந்தியம்பெருமான் திருக்கல்யாணத்தை கண்டால் திருமணமாகாத இளைஞர் மற்றும் பெண்களுக்கு உடனடியாக திருமணம் ஆகும் என ஐதீகம் இருப்பதால் இதை காண தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த கோவிலின் மிக முக்கியமான பெரிய விழாவான இந்த திருக்கல்யாணத்தை காண மக்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக திருக்கல்யாணம் நிறுத்தப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை கொரோனா வைரசுக்காக தடை செய்யாமல் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முடிவெடுத்து சிறிய அளவில் குறைந்த பக்தர்கள் வைத்தாவது திருக்கல்யாண உற்சவம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story