அம்பையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் உடனடியாக அகற்றக்கோரிக்கை


அம்பையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் உடனடியாக அகற்றக்கோரிக்கை
x
தினத்தந்தி 21 March 2020 4:00 AM IST (Updated: 20 March 2020 8:12 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக்கோரி நேற்று அந்தக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

அம்பை, 

அம்பையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக்கோரி நேற்று அந்தக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் கடை முற்றுகை 

நெல்லை மாவட்டம் அம்பையில், பாபநாசம் மெயின் ரோட்டில் ரெயில்வே கிராஸிங் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை நேற்றுமுன்தினம் மாலையில் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியில் வசிக்கும் ரஹ்மான் காலனி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று காலை 11 மணியளவில் அந்த கடையை உடனடியாக அகற்றக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பியவாறு 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்தனர். ஊர் தலைவர் முருகானந்தம் தலைமையில் அவர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான பெண்கள் கைக்குழந்தையுடன் கலந்து கொண்டனர்.

தாசில்தார் பேச்சுவார்த்தை 

அப்போது பொதுமக்கள் கூறுகையில், கடைக்கு அருகில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சமுதாய கோவில், தனியார் மில் போன்றவை உள்ளன. இந்த டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் பள்ளி மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இப்பகுதியில் நடமாட முடியாத சூழல் ஏற்படும். அத்துடன் குடியிருப்பு பகுதியில் குடிமகன்களால் தொல்லை ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவே, உடனடியாக இந்தகடையை அகற்ற வேண்டும். இல்லையேல் கடையை அகற்றும் வரை தொடர்ந்து போரடுவோம்’ என்றனர்.

தகவல் அறிந்த தாசில்தார் கந்தப்பன் அந்த பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்தார். இதை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

போலீஸ் பாதுகாப்பு 

மாலை வரை கடை திறக்கப்படவில்லை. அந்த கடையை மீண்டும் திறந்தால் முற்றுகையிடுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story