நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
ஸ்ரீபுரந்தானில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விக்கிரமங்கலம்,
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தானில் அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை செய்த நெல் மணிகளை அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சாலையின் ஓரத்தில் கொட்டி விற்பனை செய்வதற்காக காத்திருக்கின்றனர். 40 கிலோ கொண்ட 30 ஆயிரத்திற்கு மேலான மூட்டைகளும் விற்பனைக்காக காத்துக்கிடக்கின்றன.
விவசாயிகள் விரைந்து நெல்கொள்முதல் செய்யக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று காலை நெல் கொள்முதல் நிலையம் அருகே ஸ்ரீபுரந்தான்- தா.பழூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் நெல் கொள்முதல் நிலைய மண்டல மேலாளர் உமாசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஒரு வாரத்திற்குள் எல்லா நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்து விடுவோம் என அவர்கள் உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஸ்ரீபுரந்தான்- தா.பழூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story