வெளிநாட்டை சேர்ந்த 38 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்; கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளிநாட்டை சேர்ந்த 38 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
ஆரணி,
கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மாவட்ட வருவாய்த்துறை சார்பாக ஆரணி பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்களிடையே கை கழுவுதல், ஸ்கேன் தெர்மாமீட்டர் மூலம் வெப்பநிலை கண்டறிதல் மற்றும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளித்தல் ஆகியவை நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி, ஆலோசனைகளை கூறினார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலைக்கு 68 வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து பரிசோதனை மேற்கொண்டதில் 30 பேருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை.
மீதமுள்ள 38 பேருக்கு அவர்கள் தங்கியுள்ள இடத்திலேயே தனியாக தங்க வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். குறைந்தது 14 நாட்கள் கழித்துதான் கண்காணிப்பின் முடிவுகள் தெரிய வரும்.
மேலும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 24 மணிநேரமும் 3 ஷிப்டுகளில் டாக்டர்கள், காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். 1077 எண்ணில் தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில்கள் மற்றும் மசூதி, தேவாலயங்களில் சிறப்பு பாத்தியா, சிறப்பு பிரார்த்தனை, கூட்டங்கள் நடத்த வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களிடம் அறிவுறுத்தப்படுகிறது.
மக்கள் அதிகம் கூடக்கூடாது என்பதற்காக மாவட்டத்தில் 160 அரசு பஸ்கள் இயக்குவது குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மால்கள், தியேட்டர்கள் வருகிற 31-ந் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் அறிவுறுத்தியபடி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். ஊரடங்கு உத்தரவு தமக்கு தாமே அறிவித்து கொள்ளுங்கள். இது நாம் நன்றாக இருக்கவும், ஊர் நன்றாக இருக்கவும், நம் சுற்றத்தார் நன்றாக இருக்கவும் எடுக்கப்பட்ட முடிவு ஆகும்.
கொரோனா வைரஸ் தாக்கப்பட்டதாக வதந்திகளை பரப்பி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறான தகவல்களை பரப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் பா.ஜெயசுதா, செய்யாறு சுகாதார துணை இயக்குனர் அஜீதா, ஆரணி உதவி கலெக்டர் இல.மைதிலி, தாசில்தார் தியாகராஜன், நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார், ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் நந்தினி, ஆரணி வட்டார மருத்துவ அலுவலர் சுதா, ஆரணி ஒன்றியக்குழுத் தலைவர் கனிமொழிசுந்தர், மாவட்ட கவுன்சிலர் அருணாகுமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.செந்தில்குமாரி, எஸ்.வி.மூர்த்தி, வி.திலகவதி, ஆர்.சுப்பிரமணி, மற்றும் டாக்டர்கள், நகராட்சி அலுவலர்கள், கிராமப்புற தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள், எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரப் பணியாளர்கள், நகராட்சி களப் பணியாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story