கோபியில் கூலிவேலைக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேருக்கு காய்ச்சல்; கொரோனா அறிகுறியா? தீவிர மருத்துவ பரிசோதனை
கோபியில் கூலிவேலைக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேருக்கு காய்ச்சல் இருந்ததால், அவர்களுக்கு கொரோனா அறிகுறியா? என்று தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
கடத்தூர்,
கோபியில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வேலை பார்ப்பதற்காக கூலித்தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இதற்காக மேற்கு வங்காளத்தில் இருந்து 2 பேரும், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 22 பேரும் கோபிக்கு வரவழைக்கப்பட்டனர். மொத்தம் 24 பேரும் நேற்று முன்தினம் இரவு கோபியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன்படி நேற்று காலை வடமாநில தொழிலாளர்கள் 24 பேருக்கும் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் முன்னிலையில் தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ குழுவினர் தொழிலாளர்களுக்கு அனைத்து சோதனைகளும் செய்தனர்.
இந்தசோதனையில் ஜார்கண்டை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கும், மேற்குவங்காளத்தை சேர்ந்த ஒருவருக்கும் காய்ச்சல் இருந்தது. உடனே மருத்துவர்கள் அவர்களுக்கு கொரோனா அறிகுறியா? என்று சந்தேகம் அடைந்து அதில் ஒருவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றொருவரை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தார்கள். அங்கு இருவரையும் தனிவார்ட்டில் வைத்து தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. மற்ற 22 தொழிலாளர்களையும் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story