மடத்துக்குளத்தில் வக்கீலுக்கு அரிவாள் வெட்டு: 2 ஆசாமிகளை பிடிக்க கோரி சாலை மறியல்


மடத்துக்குளத்தில் வக்கீலுக்கு அரிவாள் வெட்டு: 2 ஆசாமிகளை பிடிக்க கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 20 March 2020 10:15 PM GMT (Updated: 20 March 2020 8:56 PM GMT)

மடத்துக்குளத்தில் வக்கீலை அரிவாளால் வெட்டிய 2 ஆசாமிகளை பிடிக்க கோரி வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவை-திண்டுக்கல் சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மடத்துக்குளம்,

திண்டுக்கல் மாவட்டம், வயலூரை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 37). வக்கீல். இவரது அலுவலகம் மடத்துக்குளத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தனது வேலையை முடித்து விட்டு செல்வகுமார் மடத்துக்குளத்தில் இருந்து வயலூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

மடத்துக்குளம் அமராவதி ஆற்று பாலத்தில் சென்ற போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் இவரது மோட்டார் சைக்கிள் அருகே வந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ஆசாமி ஒருவர் வக்கீல் செல்வகுமாரை அரிவாளால் வெட்டினார். இதில் நிலைதடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். பின்னர் அந்த ஆசாமிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கினார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் இதை பார்த்து போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு உடுமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மடத்துக்குளத்தில் உள்ள வக்கீல்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இரவு 10 மணியளவில் கோவை-திண்டுக்கல் சாலையில் உட்கார்ந்து வக்கீல்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜகண்ணன், மடத்துக்குளம் தாசில்தார் கனிமொழி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதற்கிடையே வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரவு 11.30 மணியளவில் வக்கீல்கள் தங்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற 2 ஆசாமிகளையும் தேடி வருகிறார்கள். அந்த 2 மர்ம ஆசாமிகள் பிடிபட்டால் தான் எதற்காக கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற விவரம் தெரியவரும்.

இந்த நிலையில், வக்கீல் செல்வகுமாரை அரிவாளால் வெட்டிய மர்ம ஆசாமிகளை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று ஒரு நாள் மடத்துக்குளத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டன.

Next Story