வாரச்சந்தை மூடப்பட்டதால் சாலையோரத்தில் நடந்த ஆடு வியாபாரம்; திருமங்கலத்தில் பரபரப்பு


வாரச்சந்தை மூடப்பட்டதால் சாலையோரத்தில் நடந்த ஆடு வியாபாரம்; திருமங்கலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 21 March 2020 3:30 AM IST (Updated: 21 March 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலத்தில் வாரச்சந்தை மூடப்பட்ட நிலையில் ஆடுகளுடன் வந்த வியாபாரிகள் சாலையோரத்தில் வியாபாரம் செய்ததால் பரபரப்பு உருவானது.

திருமங்கலம், 

திருமங்கலம் சந்தைபேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறும். வாடிப்பட்டி, சோழவந்தான், செக்கானூரணி, செங்கப்படை, கிழவனேரி உள்பட பல இடங்களில் இருந்து வாரந்தோறும் ஆடுகள் கொண்டு வரப்படும். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆடுகள் வாங்குவதற்கும் விற்பதற்கும் கூடுவார்கள்.

கொரோனா வைரஸ் பீதியின் எதிரொலியாக பலரும் கோழி இறைச்சி வாங்குவதை குறைத்து ஆட்டு இறைச்சி அதிகம் வாங்கத் துவங்கினார்கள். இதனால் ஆட்டு இறைச்சி விலை அதிகரித்தது. ஆட்டுச் சந்தையும் சூடு பிடித்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சந்தைகள் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதன்படி திருமங்கலம் ஆட்டுச்சந்தையும் மூடப்படும் என்று நகராட்சி அறிவிப்பு வெளியிட்டது.

இதனை அறியாத தொலை தூர வியாபாரிகள் ஆடுகளை வழக்கம் போல் திருமங்கலம் ஆட்டுச் சந்தைக்கு கொண்டு வந்தனர். இங்கு சந்தை அடைக்கப்பட்டு இருந்ததால் சோழவந்தான் ரோடு, உசிலம்பட்டி சாலையில் ஆடுகளை நிறுத்தி விற்பனை செய்ய தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனால் ஆடுகளை வியாபாரிகள் தாங்கள் கொண்டு வந்த வேனில் ஏற்றிச் சென்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுருளிநாதன் கூறுகையில், நகராட்சி சார்பாக ஆட்டுச்சந்தை மூடப்படுவது தொடர்பாக ஏற்கனவே சந்தை குத்தகைதாரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அது தெரியாமல் சில வியாபாரிகள் வந்துள்ளனர் என தெரிவித்தார்.

Next Story