அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பாரதீய ஜனதா வலியுறுத்தல்


அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்   பாரதீய ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 March 2020 10:15 PM GMT (Updated: 20 March 2020 9:44 PM GMT)

புதுவை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி, 

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாணவர்களுக்கு தேர்ச்சி

கொரோனா வைரஸ் தாக்குதல் எச்சரிக்கையால் தொழில், வியாபாரம், வருமானம் ஏதுமின்றி மக்கள் துன்பத்தில் இருக்கிறார்கள். பதட்டத்திலும், பாதிப்பிலும் வாடும் மக்களை காப்பாற்ற புதுவை அரசு இனியாவது சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

பக்கத்து மாநிலங்களைப்போல் புதுவை மாநிலத்திலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களை தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கவேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள்

இதுவரை வழங்கப்பட வேண்டிய இலவச அரிசிக்கான பணம் ரூ.13 ஆயிரத்தை வழங்கவேண்டும். அதற்கு நிதியாதாரம் இல்லாவிட்டால் அந்த தொகைக்கு ஈடான மின்சார கட்டணத்தை ரத்து செய்யவேண்டும். தினக்கூலி, கட்டுமான, கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள வேலையிழப்பை கருத்தில்கொண்டு அனைவருக்கும் பசியாற உணவு வழங்க ஆவண செய்யவேண்டும்.

மாநிலம் முழுவதும் பால், ரொட்டி, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு ஆவண செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெளிமாநில வாகனங்களுக்கு தடை

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை புதுவை மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருகை தரும் அனைத்து 4 சக்கர வாகனங்களையும் தடை செய்ய வேண்டும்.

பிரதமரின் ஆணையை புதுவை அரசு மக்களிடம் உரிய நேரத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Next Story