கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து இந்து அறநிலையத்துறை நடவடிக்கை


கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி:   கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து  இந்து அறநிலையத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 21 March 2020 4:00 AM IST (Updated: 21 March 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் தாக்குதல் அபாயத்தையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தடுப்பு நடவடிக்கையாக கடற்கரை, தாவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜபெருமாள், திருநள்ளாறு சனீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள், பரிகார பூஜைகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சச்சிதானந்தம் கோவில் நிர்வாகத்துக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கலெக்டர் ஆணை

திருக்கோவில்களை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஒருசில வழிமுறைகளை கையாளும்படி நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும் மாவட்ட கலெக்டர், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தி சில ஆணைகளை பிறப்பித்துள்ளார்.

கலெக்டரின் ஆணைக்கு இணங்கவும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும் திருக்கோவில் நிர்வாகத்தினர் கீழ்க்கண்ட விதிமுறைகளை உடனடியாக தவறாமல் கடைபிடிக்குமாறு பணிக்கப்படுகிறது.

பொதுமக்கள் தரிசனம் ரத்து

* கோவில் வளாகத்தில் கண்டிப்பாக கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும்.

* பொதுதரிசனம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்பட வேண்டும்.

* ஆனால் அன்றாட நைவேத்தியம் உள்ளிட்ட தினசரி பூஜைகள் பொதுமக்கள் தரிசனம் இன்றி நடத்தப்பட வேண்டும். பிரசாத வினியோகம் தவிர்க்கப்பட வேண்டும்.

சுவரொட்டிகள்

* கோவிலின் ஒவ்வொரு நுழைவுவாயிலிலும் கை கழுவும் திரவம் வைக்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள், சுவரொட்டிகள் வைக்கப்படுதல் வேண்டும்.

* இதனை மிகமிக அவசரம் என கருதவும்.

மேற்கண்ட செயல்முறைகளை நடைமுறை படுத்தியதற்கான ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் ஆணையர் சச்சிதானந்தம் கூறியுள்ளார்.

இந்து அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கையை தொடர்ந்து மணக்குள விநாயகர் கோவில், வீராம்பட்டினம் செங்கழுநீர் மாரியம்மன் கோவில், வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் தரிசனம் நேற்று மாலை முதலே ரத்து செய்யப்பட்டது.

Next Story