ஆரம்ப சுகாதார நிலையங்களில் முக கவசம் வழங்க கோரிக்கை
கிராமப்புறங்களில் முக கவசம் கிடைக்காத நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை யூனியன் சார்பில் கல்லமநாயக்கர்பட்டி, ஏழாயிரம்பண்ணை, செவல்பட்டி, காக்கிவாடன்பட்டி, தாயில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திட்ட அதிகாரி சுரேஷ், உதவி திட்ட இயக்குனர் சங்கரநாராயணன், யூனியன் ஆணையர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அதிகாரி வெள்ளைச்சாமி, மருத்துவ அலுவலர் சங்கிலிகாளை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளிராஜ், உதவி பொறியாளர் மாரியம்மாள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
கைகழுவுவதன் அவசியம் பற்றியும் இதில் எடுத்துக்கூறப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டாலும் கிராமங்களில் குடிநீர் பிரச்சினை இருப்பதால் பெண்கள் புகார் தெரிவித்தனர்.
குடிக்க தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் நிலையில் 10 முறை எப்படி கையை கழுவுவது என்று கேள்வி எழுப்பினர். ஆழ்துளை கிணறு அமைத்து தரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வெம்பக்கோட்டை பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சமீப காலமாக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. லேசான காய்ச்சல் இருந்தாலும் கூட உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று பலரும் வந்து செல்கின்றனர்.
மேலும் கிராமப்புறங்களிலுள்ள கடைகளிலும் மருந்தகங்களிலும் முக கவசம் கிடைப்பதில்லை. எனவே ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக முக கவசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இதுவரை கையுறை வழங்கப்படவில்லை. தற்போது வழங்கப்பட்டதும் பலமுறை கேட்டும் வழங்காத நிலையில் தற்போது கேட்காமலேயே கிடைக்கிறது என கூறியவாறு பெற்றுச்சென்றனர்.
Related Tags :
Next Story