பெங்களூருவில் கொேரானா வைரஸ் பாதிப்பு: போலி கிருமி நாசினி மருந்து தயாரித்த 2 பேர் கைது ரூ.56 லட்சம் பொருட்கள் பறிமுதல்


பெங்களூருவில் கொேரானா வைரஸ் பாதிப்பு:  போலி கிருமி நாசினி மருந்து தயாரித்த 2 பேர் கைது  ரூ.56 லட்சம் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 March 2020 4:23 AM IST (Updated: 21 March 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கிருமி நாசினி மருந்துக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி போலி கிருமி நாசினி தயாரித்து விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பொதுமக்கள் முகக்கவசம் அணியும்படியும், கைகளை கிருமி நாசினி மூலமாக (சானிடைசர்) சுத்தம் செய்யும்படியும் அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனையே சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் போலி கிருமி நாசினி தயாரித்து விற்பனை செய்வதும், மருந்துகடைகளில் அதிக விலைக்கு முகக்கவசம் விற்பதும் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில், பெங்களூரு வி.வி.புரம், சாம்ராஜ் பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடோன்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, அங்கு பதுக்கிய போலி கிருமி நாசினி பாட்டில்கள், பிற பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். அந்த கிருமி நாசினி பாட்டில்கள், பொருட்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

போலி கிருமி நாசினி

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பொதுமக்கள் பயன்படுத்தும் முகக்கவசம், கிருமி நாசினி போலியாகவும், அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. சமீபத்தில் கூட பெங்களூரு நகரில் உள்ள மருந்துகடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

அதே சந்தர்ப்பத்தில் சாம்ராஜ்பேட்டை, வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 2 குடோன்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு போலி கிருமி நாசினி பாட்டில்கள், ஹேண்ட்ரப், கிருமி நாசினிக்காக பயன்படுத்தும் ஆல்கஹால் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.56 லட்சம் மதிப்பு

இதையடுத்து, சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த சந்தன் என்ற லால்சந்த் (வயது 64) மற்றும் கஸ்தூரிபா நகரை சேர்ந்த நாகராஜ் என்ற ராஜு (43) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா வைரஸ் பீதியால் பொதுமக்கள் கிருமி நாசினியை பயன்படுத்துவது அதிகாித்து இருப்பதால், அதனை சாதகமாக பயன்படுத்தி போலி கிருமி நாசினியை தயாரித்து விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும், இதன்மூலம் அவர்கள் இருவரும் எளிதில் பணம் சம்பாதிக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.

கைதானவர்களிடம் இருந்து 8,500 கிருமி நாசினி மருந்து பாட்டில்கள், 280 லிட்டர் ஆல்கஹால், ஹேண்ட்ரப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.56 லட்சம் ஆகும். கைதான 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உடன் இருந்தார்.

Next Story