வேலூர், குடியாத்தத்தில் 5 இடங்களில் அமைக்கப்படுகிறது 500 படுக்கைகள் கொண்ட கொரோனா வைரஸ் தனிவார்டு - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்
வேலூர் மற்றும் குடியாத்தத்தில் தனியாருக்கு சொந்தமான 5 இடங்களில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தனிவார்டு அமைக்கப்படுவதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
வேலூர்,
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 10 படுக்கைகள் கொண்ட தனிவார்டு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வேலூரில் 3 இடங்களிலும், குடியாத்தத்தில் 2 இடங்களிலும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தனிவார்டு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் அரசு மருத்துவமனையில் 2 பேர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் யாரும் வீட்டு கண்காணிப்பில் இல்லை. இருந்தாலும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த வார்டு தற்போது ஐ.சி.யு. வார்டாக மாற்றப்படுகிறது. அதற்கு பதில் அங்குள்ள புதிய கட்டிடத்தில் 40 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்படுகிறது.
அதேபோன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூரில் 3 இடங்களிலும், குடியாத்தத்தில் 2 இடங்களிலும் என தனியாருக்கு சொந்தமான 5 இடங்களில் 500 படுக்கைகளுடன் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தனி வார்டுகள் ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
Related Tags :
Next Story