எந்த நோயும் நம்மை பாதிக்காது என்று அலட்சியமாக இருக்கக் கூடாது; கலெக்டர் பேச்சு
எந்த நோயும் நம்மை பாதிக்காது என்று அலட்சியமாக இருக்கக் கூடாது என்று கலெக்டர் கே.எஸ். கந்தசாமி பேசினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக துப்புரவு பணியாளர்கள் மூலம் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதியில் பிளிசிங் பவுடர் தெளிப்பது, கிருமி நாசினி தெளிப்பது, அரசு மற்றும் தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை மையம் சார்பில் கொரோனா வைரஸ் குறித்து துப்புரவு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பேசியதாவது:–
தூய்மை பணிகளில் அனைவரும் பயன் அடைய வேண்டும் என பணியாற்றி வருகிறீர்கள். எந்த நோயும் நம்மை பாதிக்காது என அலட்சியமாக இருக்கக்கூடாது. சீனா நம்மை காட்டிலும் தொழில், பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாகும். கொரோனா வைரஸ் முதல் தாக்குதல் அங்கு நிகழ்ந்துள்ளது.
காசநோய், தொழு நோய், எய்ட்ஸ் நோய் ஆகிய நோய்களை காட்டிலும் கொடுமையானது கொரோனா. நம் வாழ்க்கை, வாழ்வாதாரத்தில் தினந்தோறும் தூய்மையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். உலகளவில் பயங்கரமான அச்சுறுத்தல் சூழ்நிலை இருந்தாலும் நாம் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறோம். நீங்கள் ஆரோக்கியமாக முதலில் இருப்பது அவசியம்.
உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ போன்ற மாகாணங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. தினந்தோறும் அடிக்கடி கை கழுவ வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை உள்ளவர்களை விட, அதிகமான சக்தி உள்ளவர்களை கொரோனா நோய் தாக்குகிறது.
வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், வழிபாடுகள் மூடப்பட்டிருப்பது, பஸ்கள் குறைக்கப்பட்டிருப்பது இதுவரை நாம் பார்த்ததில்லை. கொரோனா வைரஸ் தாக்குதலின் போது சீனாவில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் சீல் வைக்கப்பட்டது. அங்கு வசிப்பவர்களுக்கு தேவையான அத்திவாசிய பொருட்கள், மருந்துகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து தேடுவதை காட்டிலும், தடுப்பது மற்றும் பாதுகாப்பாக இருப்பது தற்போது முதல் அவசியமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு கைகழுவும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் துப்புரவு முக கவசம் அணிந்த படியும், ஒரு அடி இடைவெளி விட்டும் அமர்ந்து இருந்தனர்.
Related Tags :
Next Story