அணுமின்நிலையம், இஸ்ரோ மையத்தில் வெளிமாநில பணியாளர்களை கொண்டு அத்தியாயவசிய பணிகளை மட்டும் செய்ய வேண்டும்
அணுமின்நிலையம், இஸ்ரோ மையத்தில் வெளிமாநில பணியாளர்களை கொண்டு அத்தியாவசிய பணிகளை மட்டும் செய்ய வேண்டும்.
வள்ளியூர்,
அணுமின்நிலையம், இஸ்ரோ மையத்தில் வெளிமாநில பணியாளர்களை கொண்டு அத்தியாவசிய பணிகளை மட்டும் செய்ய வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா அறிவுறுத்தி உள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. வள்ளியூரில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. வள்ளியூர் புதிய பஸ் நிலையத்தில், மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில் சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், முககவசம் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கொரோனா வைரசில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் பஸ்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
முன்னதாக வள்ளியூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கு முககவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் கைகளை எவ்வாறு சுத்தமாக கழுவ வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. பின்னர் வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஷில்பா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தனி சுகாதார மையம்
தமிழக முதல்–அமைச்சர் உத்தரவின்படி, நெல்லை மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து துணை சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இங்கு வரும் அனைவரையும் கை கழுவிய பிறகு உள்ளே வரும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
அணுமின்நிலையம்
கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இஸ்ரோ மையங்களில் வேலை செய்பவர்களை கண்காணிக்க சுகாதார துறை சார்பில் தனி சுகாதார மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு வெளிமாநில பணியாளர்களை கொண்டு தேவையான அத்தியாவசிய வேலைகளை மட்டும் செய்ய வேண்டும் என்றும், மற்ற வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
நெல்லை அரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 400 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அளவிற்கு வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் தனியார் பங்களிப்பு தேவையில்லை என்று கருதுகிறோம். இருப்பினும், இந்திய மருத்துவ சங்கத்தினர் தாமாகவே முன்வந்து சிகிச்சை அளிக்க தயாராக உள்ளனர். ஊரடங்கு உத்தரவின்போது பொதுமக்கள் அதிகம் கூடாமல் இருந்தால் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் போஸ், நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் குற்றாலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன், வள்ளியூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுசீலா, ஸ்ரீகாந்த், வள்ளியூர் நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story