இன்று மக்கள் ஊரடங்கு: உழவர்சந்தைகளில் ஒரே நாளில் ரூ.20 லட்சத்துக்கு காய்கறி விற்பனை
நெல்லை மாவட்டத்தில் உள்ள உழவர்சந்தைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.20 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.
நெல்லை,
இன்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், நெல்லை மாவட்டத்தில் உள்ள உழவர்சந்தைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.20 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.
உழவர்சந்தை
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடைகள் அடைக்கப்படுகின்றன. பஸ்–ரெயில்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க நேற்று கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள உழவர்சந்தைகளில் காய்கறி, பழங்கள் விற்பனை களை கட்டியது. பாளையங்கோட்டை மகராஜ நகரில் உழவர்சந்தை உள்ளது. அதில் சுமார் 150–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.
பொதுமக்கள் குவிந்தனர்
இந்த சந்தையில் நேற்று வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. காலை முதல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இங்கு குவிந்தனர். அவர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு காய்கறி மற்றும் பழங்களை வாங்கிச்சென்றனர்.
இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரி ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை மகராஜ நகர், மேலப்பாளையம், நெல்லை டவுன் கண்டியப்பேரி, அம்பை ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
நேற்று பண்டிகை காலத்தில் காய்கறி வாங்குவதுபோல் மக்கள் கூட்டம் அலைமோதியது. மகராஜ நகர் உழவர் சந்தையில் மட்டும் 31 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர்சந்தைகளையும் சேர்த்து 57 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை ஆனது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம்’’ என்றார்.
கைகளை கழுவ ஏற்பாடு
முன்னதாக உழவர்சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களின் கைகளை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கைகளை கழுவிய பின்பே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story