தமிழக எல்லையில் புளியரை சோதனை சாவடி மூடல் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன


தமிழக எல்லையில் புளியரை சோதனை சாவடி மூடல்  வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
x
தினத்தந்தி 22 March 2020 4:30 AM IST (Updated: 21 March 2020 6:09 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக எல்லையான புளியரை சோதனை சாவடி மூடப்பட்டது.

செங்கோட்டை, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக எல்லையான புளியரை சோதனை சாவடி மூடப்பட்டது. இதனால் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

தீவிர கண்காணிப்பு 

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பொதுமக்களை தாக்காத வண்ணம் மத்திய அரசு, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி கட்டுக்குள் கொண்டு வர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுடன் பறவைக்காய்சல் நோய் கூடுதலாக தாக்கப்பட்டதால் அதிகளவில் அந்த மாநிலம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் கேரளாவில் கடும் கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று தமிழக எல்லையான புளியரை சோதனை சாவடியிலும் போக்குவரத்து துறை, காவல் துறை, சுங்கத்துறை, சுகாதார துறை என பல்வேறு துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடும் சோதனைகளுக்கு பின்னர் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

சோதனை சாவடி மூடல் 

தற்போது மத்திய அரசின் கொரோனா வைரஸ் தீவிர தடுப்பு நடவடிக்கையால் தமிழக எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை சோதனை சாவடி நேற்று மூடப்பட்டது. அத்தியாவசிய பெருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், தவிர்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக செல்லும் பயணிகள், மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இரு மாநில அரசு பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.

தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், செங்கோட்டை தாசில்தார் கங்கா, சுகாதாரப்பணிகள் துனை இயக்குனர் டாக்டர் வரதராஜன், செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, கால்நடைத்துறை துறை, நகராட்சி நிர்வாகத்தினர் ஆகியோர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குறைந்த அளவே வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதால் இரு மாநில எல்லை பகுதியும் வெறிச்சோடி காணப்படுகிறது.

பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை 

புளியரை சோதனை சாவடியில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கேரள மாநிலம் கோட்டைவாசல் சோதனை சாவடிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவுப்படி தமிழக அரசின் டவுன் பஸ்கள் குறிப்பிட்ட அளவில் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இங்கிருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியபிறகு புளியரை சோதனை சாவடியில் இருந்து கோட்டைவாசலுக்கு அனுப்பப்படுகின்றனர். அதேபோல் கோட்டைவாசலில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் பயணிகளுக்கு புளியரை சோதனை சாவடியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

Next Story