கொரோனா வைரஸ் குறித்து வீட்டு சுவற்றில் துண்டு பிரசுரம் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
புதுக்கோட்டையில் கொரோனா வைரஸ் குறித்து வீட்டு சுவற்றில் துண்டு பிரசுரம் ஒட்டி கலெக்டர் உமா மகேஸ்வரி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
புதுக்கோட்டை,
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பெரிய நகரங்களில் பொது மக்கள் கூடும் ஷாப்பிங் மால், திரையரங்குகள் மற்றும் பூங்கா உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவு கூடும் பல்வேறு இடங்களை மூட உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை நகரில் பல இடங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கலெக்டர் உமா மகேஸ்வரி நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். அப்போது அவர் அண்ணாசிலையில் பயணிகளுக்கு கை கழுவும் முறை குறித்த செயல்விளக்கம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் பணியை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு, அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அப்போது கலெக்டர் உமா மகேஸ்வரி, அந்த பகுதிகளில் உள்ள வீட்டின் சுற்றில் துண்டு பிரசுரங்களை ஒட்டி, அதில் உள்ள வாசகங்களை அப்பகுதி குழந்தைகளை வாசிக்க வலியுறுத்தினார். பின்னர் அந்த குழந்தைகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு கலெக்டர் பதில் அளித்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
முன்னதாக கொரொனா வைரஸ் பாதிப்பை தடுக்க புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் வங்கிகளுக்கு சென்று கலெக்டர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் வங்கி ஊழியர் களின் பாதுகாப்பையும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் கிருமிநாசினி தெளிக்கவும், முக கவசங்கள் அணிந்து பணியாளர்கள் பணியாற்றவும், வங்கிக்கு வெளியே வாடிக்கையாளர்கள் கைகளை கழுவ செய்துவிட்டு உள்ளே அனுமதிக்க வங்கி அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கினார்.
Related Tags :
Next Story