பெரம்பலூரில் போலீசாாரிடம் இருந்து தப்பிய பெண் கைது
பெரம்பலூரில் போலீசாரிடம் இருந்து தப்பிய பெண் கைது செய்யப்பட்டார். அந்த பெண் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையின் மாடியில் பதுங்கி இருந்தபோது, போலீசில் சிக்கினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நகராட்சி, சுகாதாரப்பணிகள் சார்பில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதிமன்ற ஊழியர் குருவம்மாள் (வயது 42) என்பவரின் 2 செல்போன்கள் திருட்டு போனது.
இதுகுறித்து குருவம்மாள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வேப்பந்தட்டை தாலுகா லெப்பைக்குடிகாடு ஜமாலி நகரை சேர்ந்த ஹாலித் பாஷா மனைவி சம்சாத்(29) என்பவர் குருவம்மாளின் செல்போன்களை திருடியது தெரியவந்தது.
ஏற்கனவே அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் ஒரு திருட்டு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சம்சாத் நீதிமன்றத்தில் கையெழுத்திட வந்த போது, இந்த செல்போன் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சம்சாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து சம்சாத் தப்பியோடியதாக கூறப்பட்டது. ஆனால் அவரை போலீசார் சிறையில் அடைப்பதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து அவர் தப்பி ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் மருத்துவமனை முழுவதும் சம்சாத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து நள்ளிரவில் சம்சாத் மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையின் மாடியில் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் போலீசார் சம்சாத்தை பிடித்து கைது செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் நேற்று அவரை திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையில் போலீசார் அடைத்தனர்.
Related Tags :
Next Story