மகளிர் குழுக்கள் மூலம் முகக்கவசம் தயாரிப்பு; ரேஷன் கடைகள்மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பயன்படுத்தப்படும் முகக்கவசம் மகளிர் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதனை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட இருப்பதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
வேலூர்,
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழ்நாட்டில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஒருவர் மூலம் மற்றொருவருக்கு வைரஸ் பரவுவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான சினிமா தியேட்டர்கள், கோவில்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.
இந்த நிலையில் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவற்றின் விலையும் அதிகரித்து விட்டது. சிலர் முகக்கவசங்களை பதுக்கி வைப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு பதுக்கி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் முகக்கவச தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மகளிர் குழுக்கள் மூலம் முகக்கவசம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மகளிர் குழுக்களுக்கு 5 நாட்கள் பயிற்சியளிக்கப்பட்டு தற்போது மகளிர் திட்டம் சார்பில் வேலூர் மாவட்டத்தில் மகளிர் குழுக்களை கொண்டு முகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
வேலூரில் ஏலகிரி அரங்க வளாகத்தில் 18 எந்திரங்கள் மூலம் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு நபர் ஒரு நாளைக்கு 500 முகக்கவசங்களை தயாரிக்க முடிகிறது.
இந்த நிலையில் வேலூரில் முகக்கவசம் தயாரிக்கும் பணியை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில் வேலூர் மாவட்டத்தில் முகக்கவச தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மகளிர் குழுக்கள் மூலம் முகக்கவசம் தயாரிக்கப்படுகிறது. வெல்மா கடைகள், ரேஷன் கடைகள் மூலம் ரூ.10 விலையில் இந்த முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படும். அதேபோன்று சானிடைசரும் தயாரிக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
மகளிர்திட்ட இயக்குனர் சிவராமன் உடனிருந்தார்.
Related Tags :
Next Story