திருப்பூரில் கார் எரிப்பு தொடர்பாக 2 பேரிடம் விசாரணை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட முஸ்லிம் அமைப்பினர்


திருப்பூரில் கார் எரிப்பு தொடர்பாக 2 பேரிடம் விசாரணை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட முஸ்லிம் அமைப்பினர்
x
தினத்தந்தி 22 March 2020 4:30 AM IST (Updated: 22 March 2020 2:44 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கார் எரிப்பு சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் முஸ்லிம் அமைப்பினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன சுந்தரம் (வயது 50). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் இந்து முன்னணி கோட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான காரை கடந்த மாதம் 11-ந் தேதி வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார்.

இந்நிலையில் 12-ந் தேதி அதிகாலை 3.30 மணியளவில் அவரது காரை மர்ம ஆசாமிகள் சிலர் தீவைத்து எரித்தனர். இது குறித்து அவரது வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.

விசாரணை

இதில் அதிகாலையில் 2 ஸ்கூட்டரில் 4 பேர் ஹெல்மெட் மற்றும் முகத்தில் முகமூடி அணிந்தபடி வருவதும், காருக்கு தீவைத்துவிட்டு தப்பிச்செல்வதும் பதிவாகியிருந்தது. இது தொடர்பாக வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக எம்.எஸ்.நகர், பாலன்நகர், பாரதிநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் 4 பேரை நேற்று முன்தினம் பிடித்து விசாரணை நடத்தினர். இதன் பின்னர் 2 பேர் நேற்று மதியம் விடுவிக்கப்பட்டனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

மீதமுள்ள 2 பேரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த 2 பேரையும் விடுவிக்க வேண்டும். அவர்கள் தவறு செய்தால் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும். சட்டவிரோதமாக விசாரணை என்ற பெயரில் அவர்களை துன்புறுத்தக்கூடாது எனக்கூறி, முஸ்லிம் அமைப்பினர் நேற்று மாலை வடக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் போலீஸ் உதவி கமிஷனர் வெற்றி வேந்தன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை முஸ்லிம் அமைப்பினர் கலைந்து சென்றனர்.

Next Story