மேலும் 2 வாரங்கள் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு பேட்டி


மேலும் 2 வாரங்கள் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு பேட்டி
x
தினத்தந்தி 22 March 2020 4:55 AM IST (Updated: 22 March 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மேலும் 2 வாரங்கள் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

பெலகாவி,

பெலகாவியில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, நாளை (அதாவது இன்று) மக்கள் ஊரடங்கை கர்நாடக மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். கர்நாடகத்தில் ஒரே நாளில் 5 பேருக்கு ெகாரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். இன்னும் சிலரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் பூரண குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக உள்ளனர்.

எனவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களோ, அறிகுறி இருப்பவர்களோ தாங்கள் இறந்து விடுவோம் என்று அஞ்சப்பட வேண்டிய அவசியமில்லை. கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அந்த நோய் வந்தால் இறந்து விடுவோம் என்று பயப்பட வேண்டாம். சரியான சிகிச்சை பெற்றால் குணமடைந்து விடலாம். எக்காரணத்தை கொண்டும் கொரோனா வைரஸ் பற்றி மக்கள் பீதி அடைய வேண்டிய தேவையில்லை. ஆனால் நாம் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

பிரதமர் நரேந்திர மோடியும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தான் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் ஊரடங்கை கடைப்பிடித்தாலும், கொரோனா பரவுவதை தடுக்க மேலும் 2 வாரங்கள் மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்போது தான் கொரோனா பரவுவதை தடுக்க முடியும். இதுதொடர்பாக மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story