கொரோனா அச்சுறுத்தலால் 20 பேர் முன்னிலையில் நடந்த வக்கீல் திருமணம்


கொரோனா அச்சுறுத்தலால் 20 பேர் முன்னிலையில் நடந்த வக்கீல் திருமணம்
x
தினத்தந்தி 21 March 2020 11:48 PM GMT (Updated: 21 March 2020 11:48 PM GMT)

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கல்யாணில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என 20 பேர் முன்னிலையில் வக்கீல் ஒருவரின் திருமணம் நடந்து உள்ளது.

தானே,

தானே மாவட்டம் கல்யாண் பகுதியை சேர்ந்தவர் ருபேஷ் (வயது 25). வக்கீலான இவருக்கு பிரியங்கா (24) என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களின் திருமணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடம்பரமாக நடக்க இருந்தது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நேற்று முன்தினமே அவர்களது திருமணம் எளிமையான முறையில் நடந்தது. மணமகன் ருபேஷின் வீட்டில் நடந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என வெகுசிலர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர். மேலும் மணமக்களும் அடிக்கடி அவர்களது கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்ததை காண முடிந்தது.

இதுகுறித்து மணமகன் ருபேஷ் கூறுகையில், ‘‘எங்கள் திருமணம் 22-ந் தேதி (இன்று) நடக்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்துவிட்டோம். திருமண மண்டபம் முன்பதிவு செய்து இருந்தோம். கடந்த மாதமே அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்கும் கொடுத்து விட்டோம்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டு இருந்த திருமண நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டோம். எனது வீட்டிலேயே திருமண நிகழ்ச்சியை நடத்தினோம். குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்’’ என்றார்.

பொதுமக்கள் ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி பேசியதை அடுத்து ருபேஷ் - பிரியங்காவின் திருமணத்தை எளிய முறையில் நடத்த முடிவு செய்ததாக அவர்களின் தோழி ராதிகா கூறினார்.

Next Story