வீரவநல்லூர் அருகே, தாமிரபரணி ஆற்றில் மூழ்கி ஜவுளிக்கடை ஊழியர் சாவு


வீரவநல்லூர் அருகே, தாமிரபரணி ஆற்றில் மூழ்கி ஜவுளிக்கடை ஊழியர் சாவு
x
தினத்தந்தி 23 March 2020 4:15 AM IST (Updated: 22 March 2020 10:45 PM IST)
t-max-icont-min-icon

வீரவநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி ஜவுளிக்கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

சேரன்மாதேவி, 

நெல்லையை அடுத்த பேட்டை சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். அவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு மணிகண்டன், கணேசன், லட்சுமணன் ஆகிய 3 மகன்கள். இவர்களில் லட்சுமணன் (வயது 18) நெல்லையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக கடை விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் வீரவநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு லட்சுமணன் தனது அண்ணன் கணேசனுடன் சென்றார். அங்கு மாலை 3 மணிக்கு லட்சுமணன், கணேசன் மற்றும் உறவினர்களுடன் வீரவநல்லூர் அருகே உள்ள திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

அங்கு படித்துறை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது லட்சுமணன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். இதை பார்த்து பதறித் துடித்த கணேசன் தம்பியை காப்பாற்ற முயன்றும் பலனில்லை. அப்போது அங்கிருந்த உள்ளூரை சேர்ந்தவர்களும் ஆற்றில் இறங்கி தேடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி தாசில்தார் கனகராஜ், மண்டல துணை தாசில்தார் சரவணன், வீரவநல்லூர் போலீசார், சேரன்மாதேவி, அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ஆறுமுகம், இசக்கியப்பன் தலைமையிலான குழுவினர் வந்து தேடுதலில் ஈடுபட்டனர். பின்னர் இரவு நேரம் ஆகியதால் தொடர்ந்து தேட முடியவில்லை. நேற்று காலை 2-வது நாளாக தேடுதல் வேட்டையை தொடங்கினர். நீண்ட நேரத்துக்கு பிறகு லட்சுமணனை பிணமாக மீட்டனர்.

தொடர்ந்து வீரவநல்லூர் போலீசார் லட்சுமணன் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசாரின் விசாரணையில், ஆற்றில் மூழ்கி லட்சுமணன் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி ஜவுளிக்கடை ஊழியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story