ஊரடங்கையொட்டி பஸ், ரெயில்கள் ஓடவில்லை; கடைகள் அடைப்பு - மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது


ஊரடங்கையொட்டி பஸ், ரெயில்கள் ஓடவில்லை; கடைகள் அடைப்பு - மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 23 March 2020 3:45 AM IST (Updated: 22 March 2020 11:10 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கையொட்டி பஸ், ரெயில்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது.

திருச்செந்தூர்,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பல்வேறு மாநிலங்களிலும் பரவி உள்ளது. இதனால் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி நோய் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் நேற்று மக்கள் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பிக்கப்பட்டு இருந்தது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் நேற்று மக்கள் பொது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து வெறிச்சோடி காணப்பட்டது.

கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நேற்று நடத்தப்படவில்லை. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதி, நாழிக்கிணறு கார் நிறுத்தம், கோவில் முகப்பு பகுதி, திருச்செந்தூர் பஸ் நிலையம், திருச்செந்தூர் வடக்கு ரத வீதி உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஆறுமுகநேரி மெயின் ரோடு, குலசேகரன்பட்டினம் மெயின் ரோடு, காயல்பட்டினம் பஸ் நிலையம், ஏரல் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லை.

காயல்பட்டினம் பஸ்நிலையத்தில் நகராட்சி ஆணையாளர் பு‌‌ஷ்பலதா அறிவுரையின் படி சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம் மெயின் பஜார், முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ்கள் இயக்கப்படாததால் ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அங்குள்ள பணிமனையில் அரசு பஸ்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

கோவில்பட்டி மெயின் ரோடு, பஸ்நிலையம், எட்டயபுரம் சாலை, மார்க்கெட் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் யாரும் வரவில்லை. கோவில்பட்டி ரெயில் நிலையம் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கோவில்பட்டி புனித வளனார் ஆலயம், சூசையப்பர் ஆலயத்தில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனைக்கு வருவார்கள். ஆனால் நேற்று யாரும் வரவில்லை.

அதே போல் கோவில்பட்டி பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் மட்டும் அனுமதிக்கப்பட்டு திருமண நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கடலையூர் சாலையில் ஒரு சில இறைச்சி கடைகள் திறந்து இருந்தன. இதனை அறிந்த போலீசார் அந்த கடைகளை மூட உத்தரவிட்டனர்.

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

எட்டயபுரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எட்டயபுரம் பஜார் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை.

Next Story