மக்கள் அச்சப்பட வேண்டாம்; தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை, மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள கொரானோ சிறப்பு வார்டு அருகில் டாக்டர்கள், போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள், ஊடகத்துறையினரை பாராட்டி கைதட்டி வாழ்த்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி கைதட்டி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி டீன் திருவாசகமணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, உதவி மருத்துவர் ஜெயபாண்டியன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணலீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் காலை 7 மணி முதல் கடைகள் மூடப்பட்டு, சுய ஊரடங்கு முழுமையாக 100 சதவீதம் வெற்றி பெற்று உள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்து உள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள், அதிகாரிகள், அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த ஊரடங்கு நாளை(அதாவது இன்று) காலை 5 மணி வரை நீடிக்கும் என தமிழக முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாளை(அதாவது இன்று) காலை 5 மணிக்கு பிறகு சிறிய கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள் செயல்படலாம். பெரிய வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி இல்லை. வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை யாருக்கும் பாதிப்பு இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக 2 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆகையால் மக்கள் அச்சப்பட தேவை இல்லை. பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டுடன் வருகிற 31-ந் தேதி வரை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story