கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் ஊரடங்கு: நீலகிரி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின - கடைகள் அடைப்பு; பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் நீலகிரி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின. மேலும் கடைகள் அடைக்கப்பட்டதோடு, பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
ஊட்டி,
சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பிரதமர் நரேந்திர மோடி மக்கள் தாங்களாகவே ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும், வெளியே வராமல் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்றார்.
அதன்படி நேற்று நீலகிரி மாவட்டம் முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. சுற்றுலா நகரமான ஊட்டியில் நகராட்சி மார்க்கெட்டில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. மார்க்கெட்டுக்கு செல்லும் 18 நுழைவுவாயில்களுக்கும் பூட்டு போடப்பட்டு இருந்தது. ஊட்டி சேரிங்கிராசில் உள்ள உழவர் சந்தை அடைக்கப்பட்டது. இதுதவிர கமர்சியல் சாலை, லோயர் பஜார், மெயின் பஜார், அப்பர்பஜாரில் உள்ள நகைக்கடைகள் உள்பட அனைத்து கடைகள் அடைக்கப்பட்டன.
நீலகிரி போக்குவரத்துக்கழக மண்டலத்தில் உள்ள 6 பணிமனைகளில் அரசு பஸ்கள், விரைவு பஸ்கள் என மொத்தம் 354 பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் வழித்தடங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் இரவோடு, இரவாக அந்தந்த பணிமனைகளுக்கு வந்தது. நேற்று அரசு பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. ஊட்டி மத்திய பஸ் நிலையம் பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் யாரும் வராததால் ராஜீவ்காந்தி ரவுண்டானா, ஹில்பங்க், கலெக்டர் அலுவலக சந்திப்பு, சேரிங்கிராஸ், ஏ.டி.சி., தாவரவியல் பூங்கா சாலை என எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய சாலைகள் வெறிச்சோடி இருந்தது.
ஊட்டியில் வழக்கமாக தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நடைபெறும். ஆனால், நேற்று மக்கள் ஊரடங்கையொட்டி தேவாலயங்களில் ஆராதனை நடக்கவில்லை. தவக்கால சிறப்பு வழிபாடுகளும் நிறுத்தப்பட்டன. இதனால் ஊட்டி தூய திரித்துவ ஆலயம், புனித ஸ்டீபன் ஆலயம், புனித தாமஸ் ஆலயம், தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்பட பல தேவாலயங்கள் மூடப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஊட்டியில் கோடப்பமந்து, நொண்டிமேடு, பிங்கர்போஸ்ட், காந்தல், பெர்ன்ஹில், எல்க்ஹில், புதுமந்து உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து மக்கள் ஊரடங்கை கடைப்பிடித்தனர். சிலர் அதிகாலையிலேயே தங்களுக்கு தேவையான பாலை வாங்கி சென்றனர். மேலும் மருத்துவமனைக்கு செல்வதற்காக சிலர் வெளியே வந்தனர். அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சில சரக்கு வாகனங்களும் வந்ததை காண முடிந்தது. முக்கிய சாலைகளில் போலீசார் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள் தேநீர் கொடுத்தனர். ஊட்டியில் ஏற்கனவே சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதுடன், மலை ரெயில் இயக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று கூடலூர் நகரம், தொரப்பள்ளி, நாடுகாணி, தேவாலா, மண்வயல், நடுவட்டம், மசினகுடி உள்ளிட்ட இடங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. அதிகாலையில் கூடலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் சில டீக்கடைகள் திறக்கப்பட்டது. அதன்பின்னர் 7 மணிக்கு பிறகு டீக்கடைகளும் அடைக்கப்பட்டது. அரசு பஸ்கள், ஆட்டோக்கள், ஜீப்புகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் உள்பட தனியார் வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கூடலூரில் இருந்து மைசூரூ, ஊட்டி மற்றும் கோழிக்கோடு, சுல்தான்பத்தேரி செல்லும் சாலைகளில் வாகனங்கள் இயக்கப்படவில்லை. மேலும் பெட்ரோல் நிலையங்கள், மருந்து கடைகள், ஆவின் பால் மையங்களை திறக்க அரசு அனுமதி அளித்து இருந்தது. காலை நேரத்தில் ஆவின் பால் நிலையங்களில் மட்டும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. ஆனால் வாகன போக்குவரத்து அடியோடு இல்லாததால் பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் வரத்து இல்லை. இதனால் பணிக்கு வந்த ஊழியர்கள் பெட்ரோல் நிலையங்களில் வேலை இன்றி அமர்ந்து இருந்தனர். மேலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் மருந்து கடைகளும் மூடப்பட்டது.
சிலர் சாலையில் வாகனங்களை இயக்கி கொண்டிருந்தவாறு நகரை வலம் வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இது தவிர நடுவட்டம், பாண்டியாறு, சேரங்கோடு, கொளப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டங்களும் மூடப்பட்டது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் தங்களது வீடுகளில் இருந்தனர். பந்தலூர் தாலுகா முழுவதும் மக்கள் ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டது. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்கப்பட வில்லை. மேலும் தெருக்களிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இதனிடையே மக்கள் ஊரடங்கு மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கூடலூர், நெல்லியாளம் நகராட்சி பகுதியில் அதிகாலை 3 மணி முதல் தூய்மை பணியாளர்கள் சாலை மற்றும் தெருக்களில் பிளீச்சிங் பவுடர்களை தூவினர். மேலும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். இதேபோன்று கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர் பகுதியிலும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக நீலகிரி மாவட்ட மக்கள் வீடுகளில் முடங்கினர். அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story